கரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு.. தமிழகத்தில் காலியிடங்கள் 7 ஆக உயர்வு.. விரைவில் இடைத்தேர்தல்?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் சட்டப்பேரவை உறுப்பினரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, கரூர் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், திருச்சி தொகுதி உள்பட தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
விஜயபாஸ்கர் தனது ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரிடம் நேரில் வழங்கியிருந்தார். விதிகளுக்கு உட்பட்டு ராஜிநாமா செய்திருப்பதை உறுதி செய்த பேரவைத் தலைவர், அதை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து கரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுகவில் தொடர் அதிருப்தி
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. நம்பிக்கை வாக்கெடுப்பில் சில அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி நிலைப்பாட்டுக்கு மாறாக வாக்களித்ததை அடுத்து, அவர்களது கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. பின்னர் சமரசம் ஏற்பட்டாலும், முன்னர் வகித்த பதவிகள் மீண்டும் வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், கரூர் எம்எல்ஏவாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அவரை அதிமுகவின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமித்திருந்தாலும், கரூர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. மேலும், அவரும் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனாலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
7 தொகுதிகள் காலி
எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜிநாமாவால் சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 41 ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில், கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்த 7 தொகுதிகளுக்கும் வரும் மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications