உயர்நீதிமன்ற போலீஸ் நிலையத்தை எரித்தது வக்கீல்கள்தான்-சிபிஐ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் மூண்டபோது அங்கிருந்த போலீஸ் நிலையத்தை வக்கீல்கள்தான் தீவைத்து எரித்து தீக்கிரையாக்கினர் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற போலீஸ் - வக்கீல்கள் மோதல் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் தற்போது சிபிஐ சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ கூடுதல் டி.ஜி.பி.யும், செய்தி தொடர்பாளருமான ஸ்ரீஹார்ஸ் பால் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அவர் கூறுகையில்,

19.2.2009 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்த இரு வழக்குகளில், மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) 6 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்குகளில் 31 வக்கீல்கள், ஒரு சட்டக்கல்லூரி மாணவர் மற்றும் 27 போலீஸ்காரர்கள் மீது மத்திய புலனாய்வுத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய புலனாய்வுத் துறையினர், 3 காவல் அலுவலர்கள் மீது இ.பி.கோ. பிரிவு 427 மற்றும் 1992-ம் ஆண்டு தமிழ்நாடு சொத்துகள் (சேதம் மற்றும் அழிப்பு) தடுப்பு சட்டம் பிரிவு 3(1)-ன் கீழ் தண்டனை வழங்குவதற்கான குற்றங்களுக்காக குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்ததுடன், மேலும் 3 காவல் அலுவலர்கள் மீது தனித்தனியே தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமாக பிரயோகத்தில் ஈடுபடுதல் ஆகிய குற்றங்களுக்காக குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.

22 காவல் அலுவலர்கள் வரம்புக்கு மீறி நடந்து கொண்டதுடன், அவர்களை கண்காணிக்கும் அதிகாரத்தில் உள்ள கண்காணிப்பு அதிகாரிகளும் தங்கள் கீழ் பணியாற்றும் அலுவலர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள தவறிவிட்டனர் என்பதால் அவர்கள்மீது துறை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய புலனாய்வுத்துறை பரிந்துறை செய்துள்ளது.

மூத்த 4 போலீஸ் அதிகாரிகள் மீதான விசாரணை சம்பந்தமாக மத்திய புலனாய்வுத்துறை தனது கருத்தினை இறுதி செய்துவிட்டதாலும், சுப்ரீம் கோர்ட்டில் அவ்வழக்கு விசாரணையில் உள்ளதாலும் அதனை அது வெளியிடவில்லை. எனவே, அச்சம்பவத்தின்போது அவர்களின் செயல்பாடுகள், நடத்தைகள் மற்றும் அச்சம்பவங்களின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள் இழைத்த தவறுகளின் மீதான நடவடிக்கை குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதை தவிர்த்துள்ளோம்.

மேலும் ஒரு வழக்கில் வக்கீல்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மீது, குற்ற சதித்திட்டம் தீட்டுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலகம் விளைவித்தல், சட்டவிரோதமாக கூடுதல், தன்னிச்சையாக காயம் விளைவித்தல், தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தல், பணியில் உள்ள அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து அவருக்கு தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் இடையூறு விளைவித்தல், நெருப்பு மற்றும் வெடிபொருட்கள் மூலம் சேதம் விளைவித்தல் மற்றும் ஆயுள் தண்டனைக்கான குற்றமான அத்துமீறி குற்றமிழைக்கும் வண்ணம் நுழைதல் மற்றும் தமிழ்நாடு சொத்துகள் (சேதம் மற்றும் அழிப்பு) தடுப்புச் சட்டம் 1992 பிரிவு 3(1) மற்றும் 4 ஆகியவற்றின் கீழ், மத்திய புலனாய்வுத்துறையினர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

மேற்கூறிய இவ்விரு வழக்குகளில், சென்னை, எழும்பூர், கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பாக 12.1.2010 அன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

19.2.2009 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த இரு வழக்குகளும், மத்திய புலனாய்வுத்துறையினரால், பாரபட்சமற்ற மற்றும் நியாயமான முறையில், துறை சார்ந்த வகையில், புலன் விசாரணை செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கு தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் அடிப்படையாக அணுகி, வழக்கின் விசாரணை படிப்படியாக மேற்கொள்ளப்பட்டது.

3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு 29.10.2009 தேதியிட்ட தனது ஆணையில் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, தவறிழைத்தவர்கள் மீது போதிய ஆதாரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 22 போலீஸ்காரர்களுக்கு எதிராக துறை நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத்துறை வெளிப்படையான புலன் விசாரணையை மேற்கொண்டதோடு, வழக்கு தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கு உரிய வகையில் போதிய வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கியது. குற்றம் இழைத்ததாகக் கருதப்படும் காவல் துறையினருக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு பல்வேறு வக்கீல்களின் சங்கங்களை எழுத்து மூலமாக கேட்டுக்கொண்டதோடு, பல்வேறு நினைவூட்டு கடிதங்கள் அனுப்பியும், தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டும் கூட, அவர்களில் பெரும்பாலானோர் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை.

மேற்கண்ட முழு சம்பவங்களிலும், ஊடகங்கள் வாயிலாக கிடைக்கப் பெற்ற ஒளிப்பதிவு செய்யப்பட்ட படங்கள் மிகவும் உதவிகரமாக விளங்கின.

மத்திய புலனாய்வுத்துறையின் மேற்கண்ட விசாரணையின் முடிவு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் குறித்த வடிவமல்ல என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

இந்திய சட்டத்தின்படி, விசாரணை முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் குற்றம் செய்தவராக கருதப்பட மாட்டார்கள். நீதி விசாரணை வெளிப்படையாக நடைபெற்று நீதியை நிலைநாட்டும் பொருட்டு, அனைத்து சாட்சிகளும் தங்கள் வாக்குமூலங்களை விசாரணை நீதிமன்றம் முன்பாக பதிவு செய்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

பின்னர் ஹார்ஸ்பால் மற்றும் தென்மண்டல சி.பி.ஐ. இணை இயக்குனர் அசோக்குமார், டி.ஐ.ஜி. அனுராக் ஆகியோர் செயதியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில்,

சி.பி.ஐ.யின் விசாரணை பாரபட்சம் இல்லாமல் நடந்தது. மொத்தம் 643 சாட்சிகளை விசாரித்து உரிய ஆதாரங்கள் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாய்மொழியாக சொன்ன தகவல்கள், வீடியோ ஆதாரங்கள், புகைப்பட ஆதாரங்கள், தடய அறிவியல் ஆதாரங்கள், மருத்துவ ரீதியான ஆதாரங்கள் போன்றவை அடிப்படையில் குற்றப்பத்திகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான வழக்கு என்பதால் நாங்கள் சில விஷயத்தை வெளிப்படையாக சொல்ல முடியாது.

உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்ட போலீஸ் நிலையத்தை சில வக்கீல்கள்தான் தீ வைத்து எரித்தனர் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் அது கண்டறியப்பட்டுள்ளது.

பிரச்சினையை யார்? எப்போது தொடங்கினார்கள் என்பது பற்றி குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளோம். இங்கே வெளிப்படையாக சொல்ல முடியாது. குற்றப்பத்திரிகையில் பெயர் இடம் பெற்றுள்ள இருதரப்பினரும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர். மோதலில் ஈடுபட வக்கீல்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதாக கண்டறியப்படவில்லை.

4 உயர் போலீஸ் அதிகாரிகள் பற்றிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால்தான், அவர்களை பற்றி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கவில்லை. அவர்கள் மீது விசாரணை நடந்துள்ளது.

மோதல் சம்பவத்துக்கு தீவிரவாத கும்பல் பின்னணி இருப்பதாக தகவல் எதுவும் இல்லை. குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள சட்டக்கல்லூரி மாணவர் சட்டவிரோதமாக நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதனால்தான் அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட போலீசார் பட்டியலில் ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள் பெயர்கள் இருக்கலாம்.

குற்றம் சுமத்தப்பட்ட போலீசார் மீது இலாகாபூர்வ நடவடிக்கைக்கு குற்றப்பத்திரிகையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அரசு ஊழியர்கள் என்பதால் அவ்வாறு சிபாரிசு செய்துள்ளோம்.

வக்கீல்கள் தனிப்பட்ட நபர்கள் என்பதால் குற்றப்பத்திரிகையில் அதுபற்றி தெரிவிக்கவில்லை. ஆனால் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள வக்கீல்களின் பெயர் விவரம் பார் கவுன்சிலுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும். வக்கீல்கள் சங்கத்தினருக்கு எவ்வளவோ வாய்ப்பு கொடுத்தும் அவர்கள் ஆஜராகி தங்களிடம் உள்ள ஆதாரங்களை கொடுக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டுள்ள வக்கீல்களின் பெயர்களை வெளியிட முடியாது என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+