சட்டீஸ்கர் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு 220 வங்கிக் கணக்குகள்-பல கோடிக்கு சொத்துக்கள்
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி பி.எல்.அகர்வால் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின்போது அவருக்கு 220 வங்கிக் கணக்குகளும், பல கோடி மதிப்புக்கு பெருமளவிலான சொத்துக்களும் இருப்பது தெரிய வந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகர்வால், விவசாயத்துறை செயலாளராக இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இவரது வீடு, இவரது உறவினர்களின் வர்த்தக நிறுவனங்களில் அதிரடி ரெய்டு நடந்தது.
அதேபோல அவரது ஆடிட்டர் சுனில் அகர்வாலின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கின.
இந்த சோதனையின்போது அகர்வாலுக்கு 220 வங்கிக் கணக்குகள் இருப்பது தெரிய வந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரது பெயரில் பல கோடிக்கு சொத்துக்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
வங்கிக் கணக்குகளை போலி பெயர்கள், முகவரிகளில் அவர் செயல்படுத்தி வந்துள்ளார். தனது வீட்டு வேலைக்காரர்கள் பெயரிலும் கூட அவர் கணக்கு வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இவர் ஹவாலா வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்திருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
வருமான வரித்துறையின் இறுதி விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக சட்டீஸ்கர் மாநில அரசு தெரிவித்துள்ளது. அறிக்கை கிடைத்த பின்னர் அகர்வால் மீது நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications