அருணாச்சல்-விடுதியில் தீ: 12 பள்ளி மாணவர்கள் பலி
இடாநகர்: விடுதியில் தீ விபத்து ஏற்பட்டு பள்ளி மாணவர்கள் 12 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் எட்டு பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் இடாநகர் அருகே குருங்கும்பி மாவட்டத்தில் பாலின் என்ற பகுதியில் டான்பாஸ்கோ பள்ளி உள்ளது.
இப்பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். இந்த விடுதியில் சுமார் 62 மாணவர்கள் தங்கியிருந்தனர். விடுதியை தனியார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நேற்று நள்ளிரவு நேரத்தில் விடுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடங்களில் உள்ள கட்டுமானம் பெரும்பாலும் மரவேலைப்பாடுகளால் ஆனதால் தீயில் அனைத்தும் எரிந்தும், சுவர்கள் இடிபட்டும் விழுந்துள்ளன.
இன்று காலை மீட்புப் படையினர் வந்து இடிபாடுகளை அகற்றத் தொடங்கினர். இடிபாடுகளில் இருந்து 12 மாணவர்களின் சடலங்களை கருகிய நிலையில் மீட்டனர்.
முன்னதாக எட்டு மாணவர்கள் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சில மாணவர்களை காணவில்லை என கூறப்படுகிறது. இடிபாடுகளில் தேடும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது.
மேலும் மின்சார வசதி இல்லாத அந்த விடுதியில் மாணவர்கள் மெழுகுவர்த்தி உதவியுடனே படித்து வந்தனர் என்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications