மாற்றுத் திறன் படைத்தோருக்கு தனி துறை-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

உங்களுக்கு தெரியும் கோபாலபுரத்தில் உள்ள என்னுடைய வீட்டை எனக்கு பிறகு மருத்துவமனைக்கென்று எழுதி வைத்துவிட்டேன். இன்னும் சொல்லப்போனால் எனக்கு பிறகு அவ்வளவு காலம் என்னுடைய வீடாக இருக்க வேண்டுமா என்று என்னுடைய கேள்விக்கு நான் அளித்துக் கொண்டிருக்கக்கூடிய பதில் வருகிற ஜுன் மாதம் 3ம் தேதி என்னுடைய பிறந்த நாளென்று சொல்கிறார்கள்.

அன்றைக்குக்கூட அன்று நான் எழுதி வைத்த கோபாலபுரம் வீட்டை அரசுக்கோ அல்லது பொது அறக்கட்டளைக்கோ கொடுத்துவிடத்தான் போகிறேன்.

இதை சொல்வதற்கு காரணம் பற்றில்லாமல் வாழ வேண்டும். அந்த வாழ்க்கை அரசியலுக்கு பயன்பட வேண்டுமென்றால் அந்த அரசியல் புனிதமான அரசியலாக இருக்க வேண்டும். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தான் மக்களும் நம்மை பார்த்து நடந்து கொள்வார்கள். ஆனால் மக்கள் ஏழையாக இருக்கிறார்கள் என்பதற்காக நாம் ஏழையாக இருக்க முடியாது.

நாம் ஏழ்மையில் இருந்து விடுபட வேண்டும் என்று எண்ணும் அதே நேரத்தில் மக்களையும் ஏழ்மையில் இருந்து விடுவிப்பவர்களாக இருக்க வேண்டும். அந்த சபதத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.

உண்மையான வாழ்க்கை மக்களை வாழ வைக்கின்ற மன திண்மையான வாழ்க்கை பணத்தை, பொருளை, வைரத்தை, நகை நட்டுக்களை வெறுக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக எல்லோரும் புத்தனாக, சித்தாந்தனாக இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை.

குறைந்த பட்சம் காந்தியடிகளைப்போல, வினோபாஜியைப் போல, அந்த அளவுக்குக் கூட வேண்டாம் அண்ணாவைப் போல ஒரு வேட்டி, துண்டோடு கடைசி வரை வாழ்ந்தாரே அப்படி எளிமையானவர்களைப்போல வாழ்ந்தாலே போதும். ஒரு கட்சி நடத்துபவர் என்ற எளிமை நமக்குத் தேவை. நாம் எளிமையாக இருந்தால்தான் எளியவர்களை காப்பாற்ற முடியும்.

நாங்கள் புரிந்த சாதனைகளை நீங்கள் எப்படி உள்வாங்கி இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான் உங்களை அடிக்கடி சந்திக்கிறோம். இங்கே பேசிய மு.க.ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினார்கள். நாங்கள் புதியதாக தம்பி ஸ்டாலினை முன் வைத்து நடத்த இருக்கிற ஒரு பெரிய சாதனை இனி தமிழ்நாட்டில் குக்கிராமங்கள், சிற்றூர்கள், குடிசை வீடுகள் கிடையாது. குடிசை வீடுகளை இடித்துவிட்டு அத்தனையும் காங்கிரீட் வீடுகள். இந்த திட்டத்திற்கு கலைஞர் திட்டம் என்றாலும்கூட இது ஏழை, எளியவர்களின் திட்டம்.

நாங்கள் நினைத்தால் பணத்திற்காப் பஞ்சம்...?:

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்தான் அதிக குடிசைகள் உள்ளன. ஆக நாங்கள் களத்தில் இறங்க வேண்டிய முதல் இடமே விழுப்புரம்தான். இந்த திட்டம் 3 லட்சம் வீடுகள் இந்த ஆண்டு 1,800 கோடி ரூபாய். எங்கே இருக்கிறது பணம். யாரோ கேட்ட குரல் காதில் விழுகிறது, சட்டசபையில் கேட்ட குரல்.

நாங்கள் நினைத்தால் பணத்திற்கா பஞ்சம். நாங்கள் என்ன மடாதிபதிகளா, லட்சாதிபதிகளா, கோடீஸ்வரர்களா இல்லை. நாங்கள் ஏழைகளுக்காக வாழ்பவர்கள், ஏழைகளுக்காக சிந்திப்பவர்கள்.

ஏழைகளுக்காக சிந்திக்கின்ற ஒரு ஆட்சிக்கு எந்த பக்கம் திரும்பினாலும் பணம் கிடைக்கும். இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய திறமை ஸ்டாலினிடம் உள்ளதால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவிலேயே இந்த திட்டம் நமது வரவு, செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்டு ரூ.1,800 கோடியில் முதல் கட்டமாக நிறைவேறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதைவிட இன்னொரு திட்டத்தையும் நான் அறிவித்திருக்கின்றேன். மனித உறுப்புகள் கண் பார்வை இழந்தால் அவரை குருடன் என்கின்றோம், வாய் பேச முடியாவிட்டால் ஊமை என்கிறோம். கால் நொண்டியாகி விட்டால் அவனை முடவன் என்கிறோம். கை இல்லை என்றால் முடவன் என்கிறோம். இனி அப்படி அவர்களை அழைக்கக் கூடாது. 'மாற்றுத் திறனாளி' என்றுதான் அனைவரும் அழைக்க வேண்டும்.

மாற்றுத் திறனுடையவருக்காக ஒரு தனி இலாகாவை ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா. சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதில் கையெழுத்திட்ட நாடுகளில் 7வது நாடு இந்தியா. அதனால் அதை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா எண்ணவில்லை. அதை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு நினைவூட்ட இருக்கிறேன்.

நினைவூட்ட வேண்டுமா, வேண்டாமா என்று இங்கு விழுப்புரத்தில் குழுமி இருக்கும் நீங்கள் கையை உயரே தூக்கி உங்கள் பதிலை தெரிவியுங்கள். (முதல்வர் இவ்வாறு கூறியதும் மேடை முன்பு அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தங்கள் கைகளை உயரே தூக்கி ஆதரவு தெரிவித்தனர்). அதுமட்டுமன்றி ஐ.நா.சபையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மாற்றுத் திறனாளிகளுக்கென தனி ஒரு இலாகாவும், அதற்கொரு மந்திரியும் நியமிக்கலாம் என்று கருதுகிறேன். அவை எல்லாம் நிதிநிலை அறிக்கையை பேராசிரியர் படித்த பிறகு அதை தொடர்ந்து அவைகள் அறிவிக்கப்பட்டு அந்த சாதனையும் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்திய மக்கள் தொகையில் மாற்றுத்திறன் படைத்தோர் 2 அல்லது 3 சதவீதம் பேர் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 18 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு வாழ்வளிக்க அடுத்த திட்டத்தை இந்த அரசு கொண்டு வரும். அதற்கு உங்கள் ஆதரவு தேவை என்றார் முதல்வர்.

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்கு நினைவிடம்...

முன்னதாக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவற்றைத் திறந்து வைத்தார் முதல்வர் கருணாநிதி.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

விழுப்புரத்திலேயே நீண்ட கால கோரிக்கையாக அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை இந்த இரண்டையும் சேர்த்து அவற்றிற்கான திறப்பு விழா நிகழ்ச்சியை மக்களே ஏற்பாடு செய்து இதை காண வா என்று என்னை அழைத்திருக்கிறீர்கள் என்று தான் நினைக்கக்கூடும்.

அரசு விழா, மக்கள் நிரம்பி வழிகின்ற அரசு விழா. இந்த விழாவில் பொன்முடி சொன்னதுபோல் பல குறைகள், கோரிக்கைகள் எல்லாம் இருக்கிறது என்று சொல்லப்பட்டு அவைகள் எல்லாம் நிறைவேறி உள்ள நிலையை பார்க்கிறேன்.

நீங்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு தான் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை விழுப்புரத்தில் இன்றைக்கு திறக்கின்ற நிலையை நாம் காண்கிறோம். இது சில பேருக்கு பிடிக்காது. இதை இந்த அரசு நடத்துவது அவர்களுக்கு ஒரு அருவறுப்பை தருவது தான்.

அவர்களும் ஒரு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் இவர்கள் இப்படியே மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி கொடுப்பார்களேயானால் அடுத்ததாக மக்களை எப்படி சந்திப்பது என்ற எண்ணத்தில் பொய்யான காரணத்தை காட்டி ஆர்ப்பாட்டம், போராட்டம் என்றெல்லாம் மலை உச்சியில் இருந்து ஆணையிட்டு இங்கே இருக்கின்ற மக்களை தூண்டிவிட்டு போராட்டத்தை ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு மீண்டும் குளிர்காற்று வாங்குவதற்கு மலை உச்சிக்கு போயிருக்கிறது ஒரு மகாதீபம்.

இன்றைக்கு நான் இங்கே இருப்பது என்று சொன்னால் இந்த கல்லூரி கட்டுவதற்கு கூட சிலர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக தம்பி பொன்முடி இங்கே சொன்னார். ஏதோ இங்கு இருந்த மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி வருவதற்காக வேறு ஒரு இடத்துக்கு மாற்றி விட்டார்கள் அதற்கென்று ஒரு போராட்டம். நான் விழுப்புரத்திலே தம்பி பொன்முடியிடம் என்ன போராட்டம் என்ன காரணம் என்று கேட்டேன். அதற்கு விழுப்புரத்தில் இருக்கிற மருத்துவமனையை மருத்துவக் கல்லூரியாக மாற்றி விட்டதால் போராட்டம் என்று பொன்முடி சொன்னார்.

அதற்கு பக்கத்து மாவட்டத்திலே இருக்கிற அமைச்சர் தம்பி பன்னீர் செல்வத்திடம் விளக்கம் கேட்டேன். அதற்கு அவர் மருத்துவக் கல்லூரி இருக்கிற இடத்தில் மருத்துவமனையும் இருக்க வேண்டும், அதை வேறிடத்தில் வைக்கக்கூடாது, ஆகவே இந்த போராட்டம் என்று சொன்னார்.

நான் வியப்புற்றேன். எங்கும் இல்லாத வகையில் இங்கு மாத்திரம், ஏன் மருத்துவக் கல்லூரி இருக்கிற இடத்திலே மருத்துவமனை இருக்கக்கூடாது! என்று கருதுகிறார்கள் என்று எண்ணினேன். வழக்கமாக மருத்துவக் கல்லூரியில், அந்த கல்லூரிக்கு தொடர்புடைய மருத்துவமனையும், பக்கத்து பக்கத்திலேயே இருந்தால் தான் கல்லூரியில் பயிற்சி பெறுகின்ற மாணவர்கள், திடீரென்று ஒரு உடல் சோர்வை ஒரு மனிதனுக்கு செய்ய வேண்டியது இருந்தால் அந்த மனிதனுடைய உடலை ஆய்ந்து பார்க்க, மருத்துவமனை பக்கத்தில் இருந்தால் தான் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெறுபவர்களுக்கு அது வசதியாக இருக்கும்.

இது எப்படி என்றால், இரண்டும் ஒன்றாக இருப்பது, தாய்க்கு பக்கத்தில் பிள்ளை இருப்பது போல! தம்பி பொன்முடி குடும்பஸ்தன் என்பதால் தாயும் பிள்ளையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று இரண்டையும் ஒன்றாக வைத்தார். தாய், பிள்ளை பாசத்தை அறியாதவர்கள் இது இங்கே இருக்கக்கூடாது அங்கே தான் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள். எதற்கெல்லாம போராட்டம், எதற்கெல்லாம் கிளர்ச்சி!

எதற்கெடுத்தாலும் போராட்டம்:

போராட்டத்துக்கும், கிளர்ச்சிக்கும் ஒரே நோக்கம் திராவிட முன்னேற்ற கழகம் என்பதற்காக கத்தி தீட்டுவது, குரல் எழுப்புவது, இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது.
அவர்களுடைய நோக்கத்தையெல்லாம் நிறைவேற்றுவதற்காகத்தான் போராடுகிறார்கள். கும்பகோணத்தில் ஒரு குளத்தில் நீர்வற்றிவிட்டால் போராட்டம். இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டம்.

தமிழகத்தில் குடிசைகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றுகின்ற திட்டம் இந்த திட்டத்தின் முதற்கட்டமாக ஓராண்டு காலத்தில் 3 லட்சம் வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றப்படும். அதன் பிறகு அடுத்த ஆண்டில் மேலும் 3 லட்சம் வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றுவது. இதற்கு தமிழக அரசு ஒதுக்கியிருக்கிற பணம் 1800 கோடி ரூபாய். இதை திருச்சியிலே தொடங்கி வைப்பதற்காக எல்லா கட்சிகளையும் அழைத்தோம். இந்த விழாவிலும் பல்வேறு கோரிக்கைகள். ஒரு ஆட்சி என்றால் பல்வேறு கோரிக்கைகள் விழாவிற்கு பிறகும் கூட நம்முடைய சிவராஜ் எம்.எல்.ஏ. ஒரு கோரிக்கையை நம்மிடம் வைத்தார்.

வரலாற்று திட்டமாக சட்டமன்ற கட்டிடத்தை கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த வளாகத்திற்கு ஓமந்தூரார் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னார். எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. அவர் பெரியாரின் கொள்கையை அமல்படுத்தியவர். அவர் வாழ்ந்த ஓமந்தூர் என்ற கிராமத்தில் அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நான் இல்லை என்று சொல்லவில்லை.

நம்முடைய பொன்முடியும் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்திலேயே சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இன்னொரு கோரிக்கை திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குட்பட்ட விழுப்புரத்தில் முதுகலை விரிவாக்க மையம் தொடங்க வேண்டும் என்பது. அதுவும் பொன்முடியின் துறையில் இருப்பதால் அதுவும் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல் சிவராஜ் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டபடி ஓமந்தூரார் பெயரில் அவரது சொந்த ஊரில் நினைவுச்சின்னம் அமைவதற்கு என்னால் இயன்ற எல்லா ஆக்கப்பூர்வமான பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். அதற்குரிய நிலம், உருவாக்க தேவையான பொருள், இவற்றையெல்லாம் திரட்டித்தருகிற பொறுப்பை சிவராஜ் எம்.எல்.ஏ. ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் ஓமந்தூரார் பெயரால் கட்டப்படுகிற பணிதளத்தில் நன்கொடை உதவி சிவராஜ் எம்.எல்.ஏ. என்று போட்டால் பெரிய பெருமை சேரும். உடனடியாக அதற்கான இடம் தேடப்பட்டு நாள் குறிக்கப்பட்டு அடுத்து நான் விழுப்புரத்திற்கு வரும் நேரத்திலே அந்த ஊருக்கு சென்று அந்த மாளிகைக்கான அடிக்கல் நாட்டுவேன். ஓமந்தூரார் நினைவு மண்டபம் அமைக்கப்படும், அது நிச்சயம் நிறைவேறும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+