தமிழகத்தின் எழில்மிகு புதிய சட்டசபைக் கட்டடம்- திறந்து வைத்தார் மன்மோகன் சிங்

Subscribe to Oneindia Tamil

New Assembly
சென்னை: பிரமாண்டமான முறையில் எழுந்துள்ள புதிய சட்டசபை வளாகத்தை முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை திறந்து வைத்தார்.

முதல்வர் கருணாநிதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் தமிழகத்தின் புதிய சட்டமன்ற, தலைமைச் செயலக கட்டிட வளாகம், சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், 12.11.2008 முதல் கட்டப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டன.

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட், புதிய சட்டசபையில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று கருணாநிதி விரும்பினார். அதற்கேற்ப, சட்டமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில், வரும் 19-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த சட்டப்பேரவை - தலைமைச் செயலக வளாக கட்டிடத்தை பிரதமர் மன்மோகன்சிங் இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்காக, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

முதல்வர் கருணாநிதி தலைமையில் விழா கோலாகலமாக நடந்தது. விழாவுக்கு காங்கிரஸ் சோனியா காந்தி, ஆளுநர் பர்னாலா தலைமை வகித்தனர்.

கர்நாடக முதல்வர் எதியூரப்பா, ஆந்திர முதல்வர் ரோசய்யா, புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம், சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை மாலை 4.35 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் சென்னை வந்தனர்.

அவர்களை விமான நிலையம் சென்று முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வரவேற்புக்குப் பின்னர் பிரதமரும், சோனியாவும் புதிய தலைமைச் செயலக வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு பிரதமர் மன்மோகன் சிங் மரக் கன்றுகளை நட்டார். பின்னர் பிரதமரும், சோனியா காந்தியும், சட்டசபை வளாகக் கட்டத்தைப் பார்வையிட்டனர்.

பிறகு மாலை 5 மணிக்கு விழா மேடைக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில், புதிய சட்டசபை வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.

பலத்த பாதுகாப்பு...

விழாவையொட்டி சென்னையில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

விழா நடக்கும் இடத்தில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். விழா நடக்கும் பகுதி மத்திய படை மற்றும் மாநில போலீஸ் படையின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டிருந்தது.

நான்கு வட்ட கட்டட வளாகம்...

புதிய சட்டசபை வளாகக் கட்டடம் நான்கு வட்டங்களாக பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற வளாகம் பிளாக் ஏ' என்றும், தலைமைச் செயலக வளாக கட்டிடம் பிளாக் பி' என்றும் அழைக்கப்படுகின்றன. இதில், பிளாக் ஏ' பகுதியில் சட்டமன்ற வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிளாக் பி பகுதியில் தலைமைச் செயலக அலுவலகங்கள் (7 மாடி கட்டிடங்கள் ஏழு) கட்டப்பட்டு வருகின்றன.

பிளாக் ஏ' பகுதியில் வட்ட வடிவத்தில் அமைந்த 6 மாடி கட்டிடங்கள் நான்கு கட்டப்பட்டுள்ளன. இதுதான் சட்டமன்ற வளாகம். இது ரூ.427 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில், வட்ட வடிவத்திலான 4 கட்டிடங்கள் வரிசையாக கட்டப்பட்டுள்ளன.

இதில் பொது வளாகம்தான் பெரிய கட்டிடம். அதற்கு அடுத்தபடியாக சட்டமன்ற கட்டிடம் அளவில் பெரிதாகும். அதற்கு அடுத்த பெரிய கட்டிடம் நூலக வட்டம் ஆகும். இதில், சட்டத்துறை அலுவலகம் அமைந்திருக்கும். நான்காவதாகவும், சிறியதாகவும் முதல்-அமைச்சரின் அலுவலகம் (முதல்-அமைச்சர் வட்டம்) அமைந்துள்ளது. இதுதான் அளவில் சிறியது.

இந்த 4 வட்ட வடிவ கட்டிடங்களின் அளவு இறங்கு வரிசையில் குறைந்து கொண்டே வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 4 கட்டிடங்களை குறிக்கும் வகையில் நுழைவாயிலில் 4 நீரூற்றுகள், அந்தந்த கட்டிடங்களின் பரப்பளவு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.

நான்கு வட்ட வடிவ கட்டிடங்கள் வரிசையாக 9 லட்சம் சதுர அடிபரப்பில் கட்டப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் கட்டிடம்தான் இதில் சிறியது. பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் எளிமையாக இருக்கவேண்டும் என்பதை காட்டுவதாக இருக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி சொல்லியதால், முதல்-அமைச்சரின் நிர்வாக அலுவலகம் அமையும் கட்டிடம் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பொது வளாக கட்டிடத்தில், இந்தியாவில் முதல்முறையாக எந்த ஒரு பெரிய அரசு கட்டிடத்திலும் இல்லாத வகையில், பொதுமக்கள் பெரிய கட்டுப்பாடுமின்றி எளிதில் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த இடம் சுற்றுலா தலம் போல் விளங்கும்.

சட்டசபை கட்டிடத்தின் மீது, 100 அடி உயர பிரமாண்ட கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டமன்ற கட்டிடத்தின் தரைத்தளத்தில் வெளிச்சம் நேரடியாக விழும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+