பிரபல எழுத்தாளர் பூமணி காலமானார்.. ‘அசுரன்’ மூலக் கதை இவர் எழுதியதுதான்! இலக்கிய உலகினர் அஞ்சலி!
சென்னை: எழுத்தாளர் பூமணி (79) காலமானார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி சென்னையில் காலமானார். பூமணி எழுதிய 'வெக்கை' நாவல் தான், தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' திரைப்படமாக வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது.
அஞ்ஞாடி நாவலுக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் எழுத்தாளர் பூமணி. சென்னையில் பூமணி காலமான நிலையில் அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் பூமணி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

எழுத்தாளர் பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். இவர் 1947 ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். பூமணி எழுதிய வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், வெக்கை, நைவேத்தியம், பிறகு, வரப்புகள், வாய்க்கால் ஆகிய நாவல்கள் வாசகர்கள் மத்தியில் பிரபலமானவை.
பூமணி எழுதிய 'வெக்கை' நாவல், தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' திரைப்படமாக வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது. அஞ்ஞாடி நாவலுக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார் எழுத்தாளர் பூமணி.
1996-ல் 'கருவேலம்பூக்கள்' என்ற திரைப்படத்தையும் பூமணி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. இலக்கிய சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ் சங்க விருது, விஷ்ணுபுரம் விருது உள்ளிட்ட விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பூமணி பெற்றுள்ளார்.
கரிசல் மண்ணின் வாழ்வியலையும், உழைக்கும் மக்களின் வாழ்க்கையையும் யதார்த்தமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர் பூமணி. அவரது மறைவு, இலக்கிய உலகத்தினரையும், அவரது வாசகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பூமணி உடல், சென்னையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு கொண்டுவரப்படுகிறது. அங்கு இன்று (ஜூலை 13) இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications