மாஜி பிரதமர் தேவேகவுடாவின் மனைவி காலமானார்.. பெங்களூர் மருத்துவமனையில் பிரிந்த உயிர்
பெங்களூர்: நம் நாட்டின் முன்னாள் பிரதமர் எச்டி தேவேகவுடாவின் மனைவியும், மத்திய அமைச்சருமான எச்டி குமாரசாமியின் தாயுமான சென்னம்மா இன்று பெங்களூர் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89.
நம் நாட்டின் முன்னாள் பிரதமர் தேவேகவுடா. இவர் கடந்த 1996ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் 1997 ஏப்ரல் 21 வரை பிரதமராக இருந்தார். தேவேகவுடா கர்நாடகாவை சேர்ந்தவர். ஜேடிஎஸ் எனும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தேசிய தலைவராக உள்ளார்.

இவரது மனைவி பெயர் சென்னம்மா. இவருக்கு வயது 89. இந்நிலையில் தான் வயது முதிர்வால் சென்னம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் தான் இன்று மாலையில் சென்னம்மா சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார். இதனை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னம்மா உடல்நலம் தேறிவந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உயிர் மாலை 4 மணிக்கு பிரிந்தது'' என்று கூறப்பட்டுள்ளது.
சென்னம்மா மறைவை தொடர்ந்து கணவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா மருத்துவமனைக்கு வந்துள்ளார். தேவேகவுடா - சென்னம்மா தம்பதியின் இளைய மகன் எச்டி குமாரசாமி, மத்திய கனரக தொழில்துறை அமைச்சராக உள்ளார். இவர் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஆவார். அதேபோல் மூத்த மகன் மகன் எச்டி ரேவண்ணா கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் ஆவார். தற்போது ஜேடிஎஸ் கட்சியின் கர்நாடகா எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
