சிபிஎம் செயலாளர் படுகொலையில் குற்றவாளிகள் மூன்று பேர் சரண்
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் வேலுச்சாமி படுகொலை செய்த வழக்கில் மூன்று குற்றவாளிகள் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கந்து வட்டிக் கும்பல் அட்டகாம் கடந்த சில மாதங்களாக இருந்து வந்தது.
இந்த கும்பலின் வக்கிரமான பாலியல் கொடூரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் வேலுச்சாமி அம்பலப்படுத்தினார்.
இதனால் அவர் மீது ஆவேசம் கொண்ட 8 பேர் கொண்ட கந்துவட்டிக் கும்பல் கடந்த புதன் கிழமை இரவு கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்தனர்.
வேலுச்சாமி படுகொலை வழக்கில் கந்து வட்டிக் கும்பலை பிடிக்க காவல்துறையினர் 6 தனிப் படையினரை அமைத்துள்ளனர்.
இந்த நிலையில் , வேலுச்சாமி கொலை வழக்கில் தொடர்புடைய கந்து வட்டிக் கும்பலின் தலைவன் சிவக்குமார் (28), பூபதி (34), ராஜேந்திரன் என்ற ராஜ் கமல் (30) ஆகிய மூன்று குற்றவாளிகள் சென்னை ஜார்ஜ் டவுண் குற்றவியல் நீதி மன்றத்தில் நீதிபதி சுந்தர மூர்த்தி முன்னிலையில் சரணடைந்தனர்.
அவர்களை 17 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தர விட்டார்.
இந்த படுகொலையை கண்டித்து மார்ச் 15 ம் தேதி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.


Click it and Unblock the Notifications
