குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் தோல்வி: டாக்டர்கள் ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
நெல்லை: குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் கவனக்குறைவாக இருந்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செய்யது சுலைமான். சைக்கிளில் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவி நத்தடு பாரிஷாள் பீவி. இவருக்கு 4 ஆண் குழந்தையும், 1 பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 1999ம் ஆண்டு நத்தடு பரிஷாள் பீவுக்கு கடையநல்லூர் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
கடையநல்லூர் அரசு மருத்துவமனை டாக்டராக பணிபுரிந்த உமாதேவி அவருக்கு பிரவசம் பார்த்தார்.
பின்னர் நத்தடு பரிஷாள் பீவிக்கு குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்து கொள்ளுமாறு டாக்டர் உமாதேவி கூறினார்.
கடந்த 1999ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பரிஷாள் பீவிக்கு கடையநல்லூர் மருத்துவமனையில் குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்யப்பட்டது.
குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்து கொண்ட 8 ஆண்டுகளுக்கு பின்பும் 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் பரிஷாள் பீவி மீண்டும் கருவுற்றார்.
அப்போது கல்லிடைக்குறி்ச்சி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர் டாக்டர் மல்லிகாவிடம் தான் குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்து கொண்ட பிறகும் கருவுற்று இருப்பதாகவும், கருவை கலைக்க வேண்டும் எனவும் கூறினார்.
கருவை கலைத்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் எனவே கலைக்க முடியாது என கூறிவிட்டார். தொடர்ந்து ஜூலை மாதம் 21ம் தேதி பரிஷாள் பீவிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.
குடும்ப கட்டுபாடு ஆபரேஷன் செய்து கொண்ட பிறகும் தனக்கு குழந்தை பிறந்தது டாக்டரின் கவனக்குறைவான மருத்துவ சிகிச்சையும், சேவை குறைபாடும்தான் காரணம் என கூறி பரிஷாள் பீவி நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை நீதிபதி ராமசந்திரன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஜெசிந்தா ஆகியோர் விசாரித்தனர்.
டாக்டர்கள் உமாதேவி, மல்லிகா மற்றும் மருத்துவம், ஊரக நலப்பணிகள் குடும்ப நலத்துறை இயக்குனர் ஆகியோர் பரிஷாள் பீவிக்கு 4 லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், 5 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications