நித்யானந்தா வழக்கை சிபிஐ விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி!
சென்னை: நித்யானந்தா மீதான புகார்களை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் வீடியோவில் தோன்றி சர்ச்சையில் சிக்கிய சாமியார் நித்யானந்தாவுக்கு எதிரான புகார்களை தற்போது கர்நாடக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் மீது முதலில் புகார் அளித்த தமிழகத்தைச் சேர்ந்தவரும், மாஜி சீடருமான லெனின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில் நித்யானந்தா மீதான புகார்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்மனு நீதிபதி ஆர்.ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.
நீதிபதி ரகுபதி னது தீர்ப்பில் குறிப்பிடுகையில், 'நாட்டில் இதுபோன்ற சாமியார்களையும் மக்கள் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள்.
இவர்களை இன்னமும் சரிசெய்ய முடியவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. தங்களது நலனுக்காக அப்பாவி குடிமகன்களை சாமியார்கள் ஏமாற்றுகிறார்கள்.
இதுதொடர்பாக அரசு ஏஜென்சிகள் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த வேண்டும். அப்போது தான் இதுபோன்ற மோசடி பேர்வழிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படும்.
நித்யானந்தா வழக்கை ஒரு மத்திய ஏஜென்சி விரிவாக விசாரிக்க வேண்டும். ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அதன் காரணமாக வழக்கு அந்த மாநிலத்திற்கும் மாற்றப்பட்டுவிட்டது. தற்போது இந்த வழக்கு கர்நாடக மாநில போலீஸ் சிறப்பு புலனாய்வு பிரிவில் நிலுவையில் உள்ளது.
அந்த ஏஜென்சி பற்றியும் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ.விசாரணைக்கு மாற்றுவதற்கு ஏற்ற வழக்காக கருத முடியாது. மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார்.


Click it and Unblock the Notifications
