ஜல்லிக்கட்டை அனுமதிக்க அரசு தயார்- காளையை அடக்க காங் தயாரா? கருணாநிதி கேள்வி
சென்னை: விரும்பிய இடத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அரசு அனுமதிக்கத் தயார். ஆனால் முதல் போட்டியில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் காளையை அடக்கத் தயாரா என்று கேட்டார் முதல்வர் கருணாநிதி. இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழக சட்டசபையில் நேற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் நடந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரன் பேசுகையில்,
கடந்த 2009-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டத்தை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் முன்மொழிய அது பின்னர் இங்கு சட்டமாக இயற்றப்பட்டது. இது தமிழகத்தில் உள்ள வீர விளையாட்டு. இது ஒழிந்து போகாமல் இருக்கவும், அதை முறைப்படுத்தவும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த போலீசார் அனுமதி அளிப்பதில்லை. குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் டெபாசிட் செலுத்த வேண்டும், 5 ஆண்டுகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த நிபந்தனைகளை தளர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. உறுப்பினர் செந்தில்பாலாஜி (கரூர்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி (திண்டுக்கல்) ஆகியோரும் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை தளர்த்தும்படி கேட்டுக் கொண்டனர்.
விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டுமென்று ஞானசேகரன் கேட்கிறார். வீரவிளையாட்டு என்றும் அதை புகழ்ந்து உரைக்கிறார். எனக்குள்ள ஒரு ஆசை என்னவென்றால், அவர் கூறியதுபோல் ஜல்லிக்கட்டுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, முதல் ஜல்லிக்கட்டில், அந்த வீர விளையாட்டில் ஞானசேகரன் கலந்து கொள்வாரா? அப்படி அதற்கு அவர் எழுதித் தந்தால், அதை நம்பி, அதில் ஈடுபடுகின்ற முதல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரலாம் என்றார்.
இதைக் கேட்டதும் அவையில் பலத்த சிரிப்பலை எழுந்து அடங்கியது.


Click it and Unblock the Notifications
