'ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த நாடும் உருப்படாது'!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு தொடர்பாக சட்டசபையில் விவாதம் நடந்தபோது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

மின்சாரத் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாத விவரம்:

நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மின் பற்றாக்குறை காரணமாக தமிழக மக்கள் நிலைகுலைந்துள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையை தவிர மற்ற இடங்களில் 3 மணி நேர மின்வெட்டு உள்ளது. கிராமங்களில் அதிர நேரம் மின்சாரம் இருப்பதில்லை. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் அரசு கூடவே மின்வெட்டையும் இலவசமாக வழங்கி வருகிறது.

முன்பு அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்தது. இப்போது மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க மிகவும் காலம் தாழ்ந்து நடவடிக்கை எடுத்துள்ளது. மின் உற்பத்தி திட்டங்களுக்கான பணிகள் நடக்கின்றன. ஆனால், மின்சார உற்பத்தி தொடங்கவில்லை.

மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு 3,130 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். ஆனால், 2,450 மெகாவாட் மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது. அரிசியைப் பெற்றது போல மின்சாரத்தையும் முதல்வர் கருணாநிதி பெற வேண்டும்.

கடைத் தேங்காயை எடுத்து...

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகு தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்து வருகின்றன. தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தமிழக அரசு ரூ. 439 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் தீர்ப்பளித்துள்ளது. இது கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதுபோல உள்ளது என்றார்.

அருள் அன்பரசு (காங்கிரஸ்): அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றவிடாமல் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்ததின் விளைவாகத்தான் மின் உற்பத்தி திறனில் நாம் பின் தங்கியுள்ளோம். இதனால் தமிழகம் இருளில் மூழ்கும் சூழ்நிலை உள்ளது.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டதன் மூலம் இந்தியா முழுவதும் எவ்வளவு மின் உற்பத்தி செய்து இருக்கிறார்கள் என்று அவரால் சொல்ல முடியுமா? அதன் மூலமாக நமக்கு என்ன உதவி கிடைத்திருக்கிறது என்று சொல்ல முடியுமா?. இதன் மூலம் இந்தியாவுக்கு எந்த பலனையும் காங்கிரஸ் கட்சியால் தர முடியாத நிலைதான் இருக்கிறது.

இந்தியா முழுவதும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்தில் கூட மின் தட்டுப்பாடு இருக்கிறது. இதை தடுப்பதற்கு மத்திய அரசு முயற்சி எடுக்காத போது, காங்கிரஸ் உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சி மீது குறை கூறுகிறார். ஆட்சி செய்வது அவர்கள், குற்றத்தை எங்கள் மீது சுமத்துகிறார்கள். இவ்வாறு செயல்படுவது காங்கிரசின் கையாலாகாத தனத்தால் தான்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): அருள் அன்பரசு தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையம் நமக்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் மின் உற்பத்தியை தந்திருக்க வேண்டும். ரஷ்யாவிடம் நாம் கடந்த 3 ஆண்டுகளாக யூரேனியத்தை தரும்படி கேட்டோம். அந்த யூரேனியம் இன்னும் வராத காரணத்தினால் இன்னும் 6 மாதத்திற்கு பிறகுதான் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என்று சொல்கிறார்கள்.

நாம் போட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தை சீனாவும் போட்டுள்ளது. சீனா போட்டுள்ள ஒப்பந்தத்தை ஆதரிக்கும் நீங்கள், இந்தியா இந்த ஒப்பந்தத்தை போட்டால் ஏன் எதிர்க்கிறீர்கள். 2 ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்கு தேவைப்படும் மின் உற்பத்தியை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையான சூழ்நிலைக்கு நாட்டை காங்கிரஸ் கொண்டுவந்துள்ளது. இதை பார்த்து கையாலாகாத தனம் என்று சொன்னால் உங்களைப் பார்த்து பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றுமில்லை.

சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): அணு ஒப்பந்தத்தை எதிர்த்தது உண்மைதான். அதன் காரணமாகவே மின் உற்பத்தி தாமதித்து விட்டது என்பது ஏற்புடையதல்ல. அணு சக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா சொல்வதை இந்தியா ஏற்கக்கூடாது என்றும் இதனால் சுயசார்பு தன்மையை இழந்துவிடக்கூடாது என்று தான் சொல்கிறோம்.

சுதர்சனம் (காங்கிரஸ்): 15 ஆண்டுகளுக்கு முன்னாலே சீனா, இவர்கள் சொல்லும் அத்தனை நிபந்தனைகளையும் ஒத்துக்கொண்டு தான் ஒப்பந்தம் போட்டது. அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்து சீனா தொழில்துறையில் முன்னேறியுள்ளது. ஆனால் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்தியா ஒப்பந்தம் போடும்போது மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவையே வாபஸ் பெற்றார்கள். இப்போது பாஜகவுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

புல்லை அசை போடும் பசுமாடு போல்..

நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையத்திற்கு ரூ.433 கோடியை வட்டியுடன் மின் வாரியம் தரவேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு தான் இதுபோன்ற புதிய ஒப்பந்தம் வேண்டாம் என்று கூறினோம். அணு ஒப்பந்தத்தை அவையில் வைத்து பேச வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தினோம். ஆனால் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

ஆமை புகுந்த வீடும், அமெரிக்கா புகுந்த நாடும் உருப்படாது. எங்கள் ஊர் பக்கம் பசு மாடு பிடிப்பவர்கள் இரு தரகர்கள் துண்டால் கைகளை மறைத்துக் கொண்டு பேரம் பேசுவார்கள். வாங்குபவன் குறைந்த விலைக்கு கிடைக்க வேண்டும் என்றும், விற்பவன் அதிக விலை போக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டிருப்பான். பக்கத்தில் மாடு தான் விற்கப்படுகிறோமா, வாங்கப்படுகிறோமா என்று தெரியாமல் புல்லை அசை போட்டுக் கொண்டிருக்கும். அதுபோல் ஆளுங்கட்சியானாலும் சரி எதிர்க்கட்சியானாலும் சரி அந்த பசுமாடு போல் இருக்க முடியாது.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): அணு ஒப்பந்தத்திற்கு பசு மாடு கதையை கூறினார். அவர்கள் கூட்டணி பேசிக் கொள்வதும் அதைப் போலத்தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நன்மாறன் போன்றவர்கள் அந்த பசுமாட்டைப் போல இருக்கிறார்கள். மேற்கு வங்காளத்திலும் ஒழுங்குமுறை ஆணையம் இருக்கிறது.

நாட்டை காட்டிக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி...

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): காங்கிரஸ் கட்சி தொடர்ந்து திராவிட கட்சிகளின் தோளில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறது. நாங்கள் தனித்தும் போட்டியிட்டிருக்கிறோம். மக்களுக்கு தேவை என்று கருதினால் கூட்டணி வைத்தும் போட்டியிட்டிருக்கிறோம். கூட்டணி பற்றி அவர் இங்கு பேசுவது சரியல்ல. இந்திய நாட்டை காட்டிக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. சுயசார்புத் தன்மையை பறிகொடுப்பதை இடதுசாரிகள் ஏற்காது.

சபாநாயகர் ஆவுடையப்பன்: இந்த பிரச்சனையை இதோடு விடுங்கள்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): தேசத்தை காக்க நடந்த சுதந்திர போராட்ட வரலாறு தெரியாதவர்கள். ஏழைகளிடம் இருந்து பணக்காரர்களை காப்பாற்றுவதாகவும், பணக்காரர்களிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றுவதாகவும் கூறிக் கொண்டு பணக்காரர்களிடம் பணத்தையும், ஏழைகளிடம் இருந்து வாக்குகளையும் பெறுகிற கட்சி அல்ல காங்கிரஸ் கட்சி.

பத்மாவதி (இந்திய கம்யூனிஸ்ட்): சுதந்திர போராட்ட காலத்தில் அப்போது இருந்த காங்கிரஸ் நிலைமை வேறு. இப்போது யாராவது அந்த நிலையில் இருக்கிறார்களா என்று நெஞ்சைத் தொட்டு சொல்ல வேண்டும்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு...

எம்.என்.கந்தசாமி (காங்கிரஸ்): எங்களை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் கையாலாகாத கட்சி என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் காட்டிக் கொடுத்த கட்சி என்றும் கூறுகிறார்கள். உங்களிடம் இருந்து நாங்கள் சான்றிதழ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் உங்கள் நிலைமை கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இருக்கிறது.

இவ்வாறு கடும் வாக்குவாதம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+