சென்னை, மதுரை போக்குவரத்துக் கழகங்கள் பிரிப்பு!
சென்னை: கோவையில் நடைபெற உள்ள உலக செம்மொழித் தமி்ழ் மாநாட்டுக்கு 30 மாவட்டங்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:
தமிழ்நாட்டில் டிரைவர், கண்டக்டர் பணிக்கு பெண்களையும் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தேர்ந்தெடுத்த பெண் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஒரே மாதத்தில் மாற்றுப் பணி கேட்கிறார்கள். எனவே இந்த பணிக்கு பெண்களை தேர்ந்தெடுப்பதில் பிரச்சனை உள்ளது.
மாணவ- மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் நகர பேருந்துகளிலும், நகரப் பேருந்து செல்லாத கிராமப் பகுதிகளில், புறநகர் பேருந்துகளிலும் செல்லும் வகையில் வழங்கப்படுகிறது.
அதிக அளவில் மினி பஸ்கள் விடுவதற்கு கோர்ட்டில் தடை உள்ளது. அதை நீக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதுவரை தனியார் பஸ்களில் இலவச பாஸ் வழங்கப்படவில்லை. அதை எவ்வாறு செய்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும்.
கோவை உலக தமிழ் செம்மொழி மாநட்டுக்கு 30 மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் விடப்படும். மாநாடு தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்பே இவை இயக்கப்படும். வால்வோ, ஏ.சி பஸ்களும் விடப்படும்.
சென்னை போக்குவரத்துக் கழகம் வட சென்னை, தென் சென்னை என்று இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. அதே போல மதுரை போக்குவரத்து கழகமும் மதுரை, நெல்லை என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது. இதற்கான கம்பெனி சட்ட அனுமதிக்குக் காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் பிரிக்கப்படும் என்றார்.
ஸ்டாலின் தலைமையில் மாநாட்டு குழு கூட்டம்:
இந் நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகள் மேற்பார்வைக் குழுக் கூட்டம், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது.
மாநாட்டையொட்டி கோவை நகரில் நடந்து வரும் பணிகள் மற்றும் பல்வேறு குழுக்கள் மேற்கொண்டுள்ள பணிகளின் நிலை குறித்து அப்போது ஆய்வு செய்யப்படும்.
மாநாட்டையொட்டி கோவை நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. நிறைவு விழாவுக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 4.4 லட்சம் சதுர அடியில் இந்தப் பந்தல் அமைக்கப்படுகிறது. இதில் 50,000 பேர் அமர இருக்கைகள் போடப்படவுள்ளன.
இதுதவிர மேலும் 30,000 பேர் வரை நின்று நிகழ்ச்சிகளை காணும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
பந்தல், இருக்கைகள், அலங்காரம், மருத்துவக் குழுக்கள், சோதனைச் சாவடிகள், கண்காணிப்பு அறைகள் அமைப்பதற்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று இந்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கோவை மாநாட்டுக்கான தனி அலுவலர் அலாவுதீன், கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத், மாநாட்டு சிறப்பு தனி அலுவலர் டாக்டர் பிரபாகரன் மற்றும் குழுத் தலைவர்களாக உள்ள அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications