"எத்தனை நாள் ஏமாற்றுவார் ஜெயலலிதா நீதிமன்றத்திலே''-கருணாநிதி
சென்னை: தான் மட்டும் தான் புத்திசாலி என்பதைப் போலவும், மற்றவர்கள் எல்லாம் ஏமாளிகள் என்பதைப் போலவும் ஜெயலலிதா அறிக்கைகள் விட்டு உலகை ஏமாற்ற நினைக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நான் "எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?'' என்ற தலைப்பிலே 12.5.2010 நாளிதழ்களில் எழுதிய உடன்பிறப்பு' மடலில்- 1.7.1991 முதல் 30.4.1996 வரை ஆட்சி செய்த காலத்தில் சுமார் ரூ.6 கோடியே 65 லட்சம் அளவுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்களைக் குவித்ததாக 5.7.1997 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படாமல் விசாரணை நீடித்துக்கொண்டே செல்வதைப் பற்றியும்- அந்த வழக்கு விசாரணையை தாமதிக்க ஜெயலலிதா தரப்பினர் முயற்சித்து வருவதை பற்றியும் விரிவாக எழுதியிருந்தேன்.
வழக்கு விசாரணையை தாமதித்து வருவதைப் பற்றி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பச்சாபுரே 9.5.2005 அன்று கூறும்போது, "வருகிற 16ம் தேதி இறுதி அவகாசம் தருகிறேன். அதற்கு மேல் அவகாசம் தரமாட்டேன். அன்று ஜெயலலிதா, சசிகலா உட்பட ஐந்து பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். நீண்ட அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. வழக்கை தினந்தோறும் நடத்த உள்ளேன். இப்படி அடிக்கடி வாய்தா கேட்டால் எப்படி வழக்கை விரைவாக நடத்துவது, இந்த வழக்கை தள்ளி வைப்பது நியாயமற்றது.
பல ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இப்படி அடிக்கடி அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இரண்டரை ஆண்டுகளாக வழக்கை வாய்தா கேட்டு இழுத்தடித்துவிட்டு தற்போது மீண்டும் வாய்தா கேட்பது சரிதானா? சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை விரைவாக நடத்த வேண்டுமென்று எனக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆறு மாதமாக இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை. நான் தனியாக கடந்த ஆறு மாதமாக உட்கார்ந்து வருகிறேன்.
தனி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது போல உள்ளேன்'' என்று தெரிவித்தாரென்றால், எந்த அளவுக்கு ஜெயலலிதா தரப்பினர் இந்த வழக்கை தாமதப்படுத்த முயற்சிக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைப்பதைப்போல ஜெயலலிதா 14.5.2010 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், தன் மீதான வழக்கு தாமதப்படுவதற்கு கருணாநிதி தான் காரணம் என்றும், அவர் காரணம் அல்ல என்றும் தெரிவித்திருந்தார்.
அவருடைய அந்த அறிக்கையைப் படித்துவிட்டு, வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் எந்த அளவுக்கு ஜெயலலிதா உண்மையை மறைக்கிறார் என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. நான் எழுதிய அறிக்கை உண்மை என்பதற்கும், அவர் எழுதிய அறிக்கை உண்மைக்கு மாறானது என்பதற்கும் இன்று ஏடுகளில் வெளிவந்துள்ள ஒரு செய்தியே போதுமான சாட்சியமாக உள்ளது.
அதாவது, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 25.5.2010 அன்று பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்பாக விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் அண்மையில் நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவு நகல்கள் விவரம் இன்னும் எங்கள் கைக்கு கிடைக்கவில்லை. மேலும் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக உயர்நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும், வழக்கை நடத்துவதற்காக புதிதாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வழக்கு சம்பந்தமான கோப்புகளை படித்து வழக்கைப் புரிந்துகொண்டு மேலே விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், அதற்கு ஒரு மாத அவகாசம் வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கோரினார்.
இது ஒன்றிலிருந்தே வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவது யார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்த வழக்கினை உண்மையில் விரைவாக முடிக்க வேண்டுமென்பதில் ஜெயலலிதா தரப்பினர் அக்கறை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையானால், என்ன செய்திருக்க வேண்டும். வழக்கு விசாரணையைத் தொடர அனுமதித்திருக்க வேண்டும். மாறாக கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலே முறையீடு செய்தார்கள்.
உச்சநீதிமன்றம் அவர்களின் மனுவினை ஏற்க மறுத்து அவர்கள் உயர் நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்யாமல், உச்ச நீதிமன்றத்துக்கு வரக்கூடாது என்று கூறி ஜெயலலிதாவின் மனுவினை தள்ளுபடி செய்துவிட்டது. எனவே, தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்திலே மனுதாக்கல் செய்யப் போகிறார்கள். கர்நாடக சிறப்பு நீதிமன்றம் இவர்களின் மனுவினை தள்ளுபடி செய்தவுடன், மேல் முறையீடு செய்ய வேண்டுமென்றால், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தான் அப்போது மனு செய்திருக்க வேண்டும்.
தேவையில்லாமல் உச்சநீதிமன்றத்திற்கு சென்று, அவர்கள் மனுவை ஏற்க மறுத்து, தற்போது மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்போகிறேன் என்று சொல்வதையெல்லாம் கவனித்தால் இந்த வழக்கினை எப்படியாவது தாமதப்படுத்துவது தான் ஜெயலலிதா தரப்பினரின் முக்கிய திட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், மற்றவர்கள் எல்லாம் ஏமாளிகள் என்பதைப் போலவும், தான் மட்டும் தான் புத்திசாலி என்பதைப் போலவும் ஜெயலலிதா அறிக்கைகள் வாயிலாகவே உலகை ஏமாற்ற நினைக்கிறார். இதனால் தான் நான் முதலில் எழுதிய கடிதத்துக்கு "எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?'' என்று தலைப்பிட்டிருந்தேன். அது எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்பதைத் தான் இன்று ஏடுகளிலே வெளிவந்துள்ள செய்தி நிரூபிப்பதோடு, "எத்தனை நாள் ஏமாற்றுவார் ஜெயலலிதா நீதிமன்றத்திலே'' என்று கேட்கத் தானே தோன்றுகிறது.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications