திருக்குவளை-கருணாநிதி வீட்டு முன் உண்ணாவிரதம் இருக்க முயற்சி: 400 பேர் கைது
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள முதல்வர் கருணாநிதி வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்ற சிறுபான்மை தனியார் பள்ளி ஆசிரியர்கள் 400 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு சிறுபான்மை தனியார் பள்ளி ஆசிரியர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி, இன்று காலை திருக்குவளையில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டு வாசல் முன்பு உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, அந்த சங்கம் அறிவித்திருந்தது.
இதன்படி உண்ணாவிரதம் இருப்பதற்காக, மாநிலம் முழுவதும் இருந்தும் சுமார் 400 சிறுபான்மை ஆசிரியர்கள் திருக்குவளை வந்தனர்.
இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை திருக்குவளை ஊருக்குள் நுழைய விடாமல் கைது செய்து எட்டுக்குடி கிராமத்துக்கு கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.
முன்னதாக அவர்களைத் தடுக்க திருக்குவளையை சுற்றி 4 வீதிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
தங்களுக்கு 1981ம் ஆண்டிற்கு பிறகு உதவித் தொகையே வழங்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications