திட்டமிட்டபடி தொடங்கியது மருத்துவ, பொறியியல் கவுன்சிலிங்
சென்னை: திட்டமிட்டபடி இன்று காலை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு பல்மருத்துவக் கல்லூரி, தனியார் பல்மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு உரிய இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கான கவுன்சிலிங்கை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ தேர்வு குழு நடத்துகிறது.
இந்த வருடம் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர 18 ஆயிரத்து 131 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ரேண்டம் நம்பர் மற்றும் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. 7 மாணவர்களும் 6 மாணவிகளும் 200-க்கு 200 கட் ஆப் எடுத்து சாதனை புரிந்தனர்.
இன்று காலை 9 மணிக்கு மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கான கவுன்சிலிங் தொடங்கியது. அதில், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 42 பேருக்கும், விளையாட்டு வீரர்களுக்கான பிரிவில் 3 பேருக்கு, முன்னாள் ராணுவத்தினருக்கான பிரிவில் 2 பேருக்கும் இடம் கிடைத்தது.
இன்று பிற்பகலில், முதல் 79 இடங்களைப் பிடித்தவர்களுக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது.
ஜூலை 3வது வாரத்தில் 2வது கட்ட கவுன்சிலிங் தொடங்கும் என துணை மருத்துவக் கல்வி இயக்குநர் ஷீலா கிரேஸ் தெரிவித்தார்.
பொறியியல்...
இதேபோல பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங்கும் இன்று காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.
இன்று காலை நடந்த கவுன்சிலிங்கின்போது விளையாட்டுப் பிரிவினர் 182 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 12 பேருக்கு அண்ணா பல்கலைக்ழகத்தில் இடம் கிடைத்தது. 88 பேருக்கு பிற கல்லூரிகளில் இடம் கிடைத்தது.
அதேபோல முதல் 7 இடங்களைப் பிடித்தவர்களில் 3 பேர் மருத்துவப் படிப்பை தேர்வு செய்துள்ளனர்.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 5ம் தேதி தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications