பிரதமர் பதவி தேடி வந்தும் நிராகரித்தவர் மூப்பனார்-பிரணாப் முகர்ஜி
கும்பகோணம்: தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை நிராகரித்தவர் ஜி.கருப்பையா மூப்பனார் என்று கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.
மூப்பனாருக்கு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கும்பகோணத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். நிகழச்சியில் பிரணாப் முகர்ஜி பேசுகையில்,
நாட்டின் மாபெரும் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய ஜி.கே.மூப்பனாரின் சிலையை திறந்துவைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கும், எனக்கும் ஏற்பட்ட உறவு 40 ஆண்டு காலம். அந்த காலங்களில் அவருடன் பணியாற்ற அற்புத வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
காந்தியடிகள் வழியில் அரசியலில் அவர் எளிமையாகவும், தூய்மையானவராகவும் இருந்தார். மிகவும் பாரம்பரிய மிக்க, செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்த அவர், தனது வாழ்நாள் முழுவதும் ஏழை மக்களுக்காக பணியாற்றினார்.
காங்கிரஸ் கட்சி பிரிந்த போது மூப்பனார் தனது ஆதரவாளர்களோடு இந்திராகாந்தி தலைமையை ஆதரித்தார். இந்திராகாந்தியின் முக்கிய தளபதிகளுள் ஒருவராகவும் ஜி.கே.மூப்பனார் விளங்கினார்.
அவரது எளிமை, நேர்மையை பார்த்து நான் வியந்தேன். இந்திராகாந்திக்கு, அரசியலில் எந்த மாநிலத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும், ஜி.கே.மூப்பனாரை தொடர்பு கொண்டு அவரை தான் அங்கு சென்று பிரச்சினையை பேசி முடிக்க சொல்வார். மூப்பனாரும் அங்கு சென்று பிரச்சினையை பேசி வெற்றிகரமாக முடிப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
மூப்பனார் கட்சியில் பதவியில் இருந்த போதும் ஒரு சில வார்த்தைகளே பேசுவார். காங்கிரசார் ஒவ்வொருவரையும் அன்போடு நேசித்தார். அவர் அனைத்து மாநிலங்களிலும், கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய நிலையில் இருந்த போதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல், அவர்களிடம் அன்பு பாசம் குறையாமல், முகம் கோணாதவாறு செயல்படுவார்.
கட்சியில் இருந்து யாரையும் நீக்க வேண்டும் என்று நினைக்காதவர். ஒரு தொண்டரை கூட இழக்க விரும்பமாட்டார். மற்றவர்களை தங்களது கட்சியில் சேர்க்கத்தான் நினைப்பார். அது தான் இயக்கத்தை வளர்க்கும் விதம் என்று கூறுவார். ஒவ்வொருவரையும் அவர் புரிந்து கொண்டதால் தான், அவர்களை எங்கு வைத்தால் கட்சி எப்படி இருக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டு அதன்படி செயல்படுவார்.
1996-98-ல் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியைப் பிடிக்க தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமையும் நிலை. அப்போது முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கை பிரதமர் ஆக்க முடியாத நிலை. இதையடுத்து ஜோதிபாசுவை பிரதமர் ஆக்க முயன்ற போது அவர்களது கட்சி தலைமை மறுத்து விட்டது.
அப்போது நான் மூப்பனார் பெயரை பரிசீலனை செய்தேன். இது குறித்து மூப்பனாரிடம் கூறி நீங்கள் பிரதமர் ஆக வேண்டும் என்று கேட்ட போது அதற்கு அவர் எனக்கு பதவி, அதிகாரம் தேவை இல்லை. சாகும்வரை மக்கள் தலைவராக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி அதன்படி செயல்பட்டார்.
காந்தியடிகளுக்கு பிறகு பிரதமர் பதவியை நிராகரித்தவர்கள் 3 பேர். பெருந்தலைவர் காமராஜர், ஜி.கே.மூப்பனார், சோனியாகாந்தி ஆகியோர் தான். சோனியாகாந்தி 2 முறை பிரதமர் பதவி தேடி வந்த போதும் நிரகாரித்து விட்டார். அந்த அளவிற்கு தியாக மனம் படைத்தவர்கள். மக்கள் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். அதற்காக உங்கள் முன்னால் நான் தலை வணங்குகிறேன் என்றார் பிரணாப்.












Click it and Unblock the Notifications