வாய்தா: ஜெவுக்கு எதிராக நாளை திமுக இளைஞரணி போராட்டம்
கோவை: நான் டெல்லியில் முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது தமிழகத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை எப்படி நிறைவேற்றுகிறீர்கள் என்று அனைத்து மாநில முதல்வர்களும் வியந்து கேட்டார்கள் என்று துணை முதல்வல்வர் ஸ்டாலின் கூறினார்.
கோவை வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய அவர்,
சிதம்பரம் பூங்காவில் நடைபெறும் இந்த கூட்டத்தை திமுக பொதுக்கூட்டம் என்று நான் சொல்ல மாட்டேன். இந்த கூட்டத்தை சிறப்பான மாநாடு என்றுதான் அழைத்திட வேண்டும்.
இது யாருக்கோ பதில் சொல்ல நடைபெறும் கூட்டம் அல்ல. வரலாற்றில் இடம்பெற்றிருக்க கூடிய தலைவர்களுக்கு பதில் சொல்லி பழக்கப்பட்டிருக்கிற மேடைதான் திராவிட முன்னேற்ற கழக மேடை. வந்தேரிகளுக்கெல்லாம் பதில் சொல்லி பழக்கப்பட்ட மேடை இதுவல்ல. ஒரு மாதத்துக்கு முன்னால் இதே கோவை மாநகரில், இந்த கொங்கு மண்டலத்தில் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்ககூடிய வகையிலே உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை முதல்வர் கருணாநிதி முன்னின்று நடத்தினார்.
அந்த செம்மொழி மாநாட்டை நடத்திய தலைவருக்கு கோவையில் இருக்க கூடிய மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து நன்றி சொல்லும் மாநாடுதான் இது.
தேர்தல் நேரத்தில் தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள், உறுதி மொழிகள் எல்லாம் இன்றைக்கு எந்த அளவுக்கு நிறைவேற்றப்படுகிறது, அப்படி நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எல்லாம் மக்களிடத்திலே எந்த அளவுக்கு போய் சேர்ந்திருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கிற போது சாரை, சாரையாக அதிமுகவில் இருக்கிற முன்னாள் அமைச்சர்கள் மட்டும் அல்ல, சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் அல்ல, இன்னும் பல்வேறு கட்சிகளில் இருக்க கூடிய தோழர்கள், தொண்டர்கள் எல்லாம் திமுகவில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் இந்த ஆட்சியின் மீது ஏற்பட்டு இருக்க கூடிய நம்பிக்கை, அதையும் தாண்டி ஆட்சியை வழி நடத்தும் தலைவர் மீது ஏற்பட்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை தான்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் செலுத்த வேண்டிய ரூ. 7,000 கோடி கடனை ரத்து செய்தது திமுக ஆட்சிதான். அதில் அதிமுகவினர்தான் அதிக அளவில் பயன்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ள முதல்வர் கருணாநிதி, தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியுள்ளார். சொன்ன திட்டங்கள் மட்டுமன்றி, சொல்லாத திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
தேர்தல் நேரத்தில் ரூ. 2க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என்று திமுக அறிவித்தபோது, அது முடியாது என்றார் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா. ஆனால், இப்போது ரூ. 1க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல அறிவிக்காத பல திட்டங்களையும் அரசு நிறைவேற்றி வருகிறது. நோய்கள் என்ன ஏழை, பணக்காரன் பார்த்தா வருகிறது? அதனால் தான் தலைவர் சிந்தித்தார். எந்த நோயாக இருந்தாலும், அதற்குரிய சிகிச்சை செய்ய வேண்டும் என்று கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, உயிர்காக்க கூடிய காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார்.
10 நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். அப்போது அங்கு வந்த அனைத்து மாநில முதல்வர்கள் எல்லாம், தலைவர் கலைஞர், முதல்வர் எப்படி இருக்கிறார்? என்று முதல் கேள்வியை கேட்டனர். அடுத்த கேள்வியாக, கலைஞர் காப்பீட்டு திட்டத்தை எப்படி நீங்கள் வெற்றிகரமாக நடத்துகிறீர்கள்? உங்களால் எப்படி முடிகிறது? என்று கேட்டனர்.
அதற்கு அடுத்த கேள்வியாக கலைஞர் வீட்டு வசதி திட்டம் பற்றிக் கேட்டார்கள்.
தமிழகத்தில் குடிசைகளே இருக்க கூடாது. அதற்கு மாற்றாக காங்கிரீட் வீடுகள் உருவாக்கப்பட வேண்டும். வரும் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகளை கட்டித்தருவதற்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்பட்டு, அதற்கு இந்த நிதி ஆண்டில் ரூ.1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகளை கட்டிக்கொடுக்கும் அற்புதமான திட்டத்தை நாம் நிறைவேற்றி இருக்கிறோமே. அந்தத் திட்டத்தை பற்றி அத்தனை முதல்வர்களும் கேட்டார்கள்.
அகில இந்திய அளவில் இருக்க கூடிய மாநிலங்களின் முதல்வர்கள் அத்தனை பேரும் கலைஞர் ஆட்சியின் திறமையை பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிற நிலையில்தான் இங்கு திமுக ஆட்சி நடக்கிறது. ஆகவே அந்த ஆட்சிக்கு தொடர்ந்து நல்லாதரவு வழங்கிட வேண்டும்.
நாளை திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் சொத்து குவிப்பு வழக்கில்
ஜெயலலிதா வாய்தா வாங்குவதை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் திமுக இளைஞர் அணி அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்களுடன் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications