சல்யூட் செய்யாத காவலர்-இன்ஸ்பெக்டர் விட்டார் 'பளார்'!
திருவனந்தபுரம்: கேரளாவில், சல்யூட் வைக்காத காவலரை கன்னத்தில் ஓங்கி பளார் என அறைந்தார் இன்ஸ்பெக்டர். அடி வாங்கிய காவலர், முதல்வர் அச்சுதானந்தனிடம் புகார் கொடுத்துள்ளார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கோத்தப்பகோடு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிபவர் ஹரிகுமார். இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரமேஷ்குமார்.
சம்பவதன்று ஹரிகுமார் தனது நண்பர்களுடன் அங்குள்ள ரோட்டில் பேசிக் கொண்டிருந்தார். அன்று அவருக்கு விடுமுறை என்பதால் அனைவரும் ஜாலியாக பேசி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஜீப்பில் வந்தார்.
அவர் ஹரிகுமார் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டார். ஆனால் ரமேஷ்குமார் வருவதை ஹரிகுமார் கவனிக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த ரமேஷ்குமார் ஜீப்பை விட்டு இறங்கி சென்று ஹரிகுமார் கன்னத்தில் அறைந்தார்.
தனக்கு ஏன் சல்யூட் செய்யவில்லை என் கேட்டார். இதனை சற்றும் எதிர்பாரத ஹரிகுமார் நிலைகுலைந்து போனார். அதன்பிறகு இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
அதில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், ஹரிகுமாரை சரமாரியாக அடித்து உதைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். படுகாயம் அடைந்த போலீ்ஸ்காரர் ஹரிகுமார் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மீது முதல்வர் அச்சுதானந்தனிடம் புகார் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
