மருத்துவ படிப்பிலும் இனி ஐஐடி நிலைமை தான்-ராமதாஸ்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தை பொறுத்தவரையில் மருத்துவம், பொறியியல் முதலான தொழில் படிப்புகள் என்பது ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு காலத்தில் எட்டாக் கனியாக இருந்தது. ஏனெனில், சமுதாயத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்களின் பிள்ளைகள் இந்த தொழிற் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு நுழைவுத் தேர்வு என்பது பெருந்தடையாக இருந்து வந்தது.
பெரும் போராட்டத்திற்கு பின்னர் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்களும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புற மாணவர்களும், ஏழை எளியவர்களின் பிள்ளைகளும் மருத்துவக் கல்லூரிகளில் அதிக இடங்களை பெற்று பயனடைந்து வருகிறார்கள்.
இந் நிலையில், மருத்துவம் மற்றும் மருத்துவ பட்டமேற்படிப்பு வகுப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு இனி அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்திருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் இந்த முடிவுக்கு ஒப்புதல் வழங்கிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் ஒரு வழக்கில் இந்த முடிவு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்திகள் உண்மையானால், இந்த முடிவு மருத்துவக் கல்வியில் மாநிலத்திற்கு உள்ள அதிகாரத்தை பறித்துவிடும். அத்துடன், தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட நுழைவுத் தேர்வு என்கிற தடை மீண்டும் கொல்லைப்புற வழியாக நுழைந்துவிடும். மேலும், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து வரும் வாய்ப்பையும் பறித்துவிடும்.
சென்னையில் ஒரு ஐ.ஐ.டி. தொழிற்கல்வி நிறுவனம் உள்ளது. மாநிலத்தின் தலைநகரில் இது அமைந்திருந்தாலும், தமிழக மாணவர்கள் பெருமளவில் இதில் சேர முடிவதில்லை. வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களே இத்தனை காலமும், அதிக அளவில் ஆக்கிரமித்து படித்த வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முக்கியக் காரணம் ஐ.ஐ.டி. போன்ற தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதே ஆகும். இனி மருத்துவக் கல்லூரிகளுக்கும் அகில இந்திய அடிப்படையில் நுழைவுத் தேர்வு நடத்தினால், ஐ.ஐ.டி.யைப் போன்று தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும், ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் வசதி படைத்த நகப்புறத்து மாணவர்களும் ஆக்கிரமித்துக் கொள்வார்கள். தமிழகத்தில் இப்போது பயனடைந்துவரும் நலிந்த பிரிவினரின் பிள்ளைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் இந்த ஆபத்தை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. இது ஆறுதல் தருகிறது என்றாலும், கடிதம் எழுதிவிட்டோம்; கடமை முடிந்துவிட்டது என்ற அளவில் நின்றுவிடக்கூடாது.
ஏனெனில், இது ஒரு கட்சியின் பிரச்சனையல்ல. தமிழகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சனை; நமது இளைஞர்களின் எதிர்காலத்தையும், சமூகநீதியையும் கேள்விக் குறியாக்கும் பிரச்சனை. எனவே, இதில் அரசியலை ஒதுக்கிவைத்து விட்டு, தமிழகத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வழிமுறைகள் குறித்து சிந்தித்து, அதன்வழி செயல்பட வேண்டும்.
ஏற்கனவே, வேறு சில பிரச்சனைகளில் தன்னிச்சையாகச் செயல்பட்டதைப் போன்று, சமூகநீதிக்கு வேட்டுவைக்கும் இந்த ஆபத்தை தடுக்கும் பிரச்சனையில் அரசு தன்னிச்சையாக முடிவு செய்து செயல்படாமல், அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் கலந்தாய்வு செய்ய வேண்டும்.
தேவைப்பட்டால், அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவுடன் டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து தமிழகத்தின் தனித்தன்மையை எடுத்துக்கூறி, அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு நமது எதிர்ப்பை தெரிவித்து, நமது மாணவர்களின் எதிர்கால நலனுக்கு விரோதமான இந்த முடிவை கைவிடச் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications