என் முகத்தை பார்க்க லட்சோபலட்சம் மக்கள் ஆர்வம்- விஜயகாந்த் சொல்கிறார்
சென்னை: என் முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள சொல்லுகிறார் கருணாநிதி. சினிமாவில் கதாநாயகனாக நடிக்கிறவன் நான். ஒவ்வொரு நாளும் எனது முகத்தை நான் பார்த்து மேக்கப் போடாமலா நடிக்க முடியும். நம் முகத்தை நாம் பார்த்துக்கொள்வது பெரிதல்ல. நம் முகத்தை நாட்டு மக்கள் பார்க்க ஆவலோடு இருக்கின்றார்களா என்பதே கேள்வி என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் சம்பளத்தின் பெரும் பகுதியை கருப்புப் பணமாக வாங்குகிறார் என்று கூறியிருந்தார் முதல்வர் கருணாநிதி. மேலும், விஜயகாந்த் தனது முகத்தை முதலில் கண்ணாடியில் பார்த்து விட்டு பிறகு திமுக, அதிமுக ஊழல் கட்சிகள் என்று கூறட்டும் என்றும் சாடியிருந்தார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள பதில் அறிக்கை:
கதாநாயகனாக நடித்து நான் வாங்குகிற சம்பளத்தில் பெரும் பகுதி வருமான வரிக்கட்டாமல் கறுப்பு பணமாக வாங்கப்படுவதாக கூறப்படுகிறது என்று முதல்வர் கருணாநிதி என்னைப்பற்றி விமர்சித்துள்ளார்.
என்னைப் பற்றி நேரடியாக குற்றம்சாட்ட முடியாமல், அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரே கூறப்படுகிறது, நம்பப்படுகிறது என்று கூறி தப்பிக்கொள்வது ஏன்?. அவர் அப்படி கூறுவது முதல் தடவையல்ல. இதற்கு முன்பு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீதும் கூறினார். வேறு எந்த குறைகளையும் காண முடியாததால், இந்த உளுத்துப்போன குற்றச்சாட்டை அவர் கூறி வருகிறார்.
முதல்வர் கருணாநிதியின் குடும்ப வாரிசுகள் சினிமா படம் எடுக்கிறார்களே, அந்தப் பணம் கறுப்பு பணமா? அல்லது சிவப்பு பணமா? அல்லது நீலப் பணமா?.
இரவு பகல் பாராமல் நெற்றி வியர்வை நிலத்தில் விழ, இரவு பகல் பாராது உழைத்து சம்பாதித்ததில் அரசுகளுக்கு கட்டிய வரி போக மீதி பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக வழங்கி வருகிறேன்.
என்னைப் பற்றி குறைகூறி வரும் முதல்வர் கருணாநிதி, அவரது குடும்ப பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் இன்று உலக பணக்காரர்கள் வரிசைக்கு போட்டியிடுகிறார்களே அவர்களுக்கு எந்த தொழில் மூலம் பணம் வந்தது என விளக்குவாரா?.
மாமண்டூரில் நான் கட்டிய திருமண மண்டபத்தை திறந்து வைத்த அன்றே பொதுமக்களிடம் ஒப்படைத்தேன். அதற்கு பெயர்தான் உண்மையான தானம். சொந்த வாழ்க்கையில் நான் ஆற்றியுள்ள உதவிகளை பட்டியலிட்டால், எந்த பத்திரிகையிலும் வெளியிட இடம் இருக்காது.
தான் செய்த உதவிகளை பெற்றவர்கள்தான் பேச வேண்டுமே தவிர, தான் பேசக் கூடாது. ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு அடையாளம் உண்டு. காமராஜர் என்றால் கல்வி கண்ணை திறந்தவர் என்றும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்றால் சத்துணவு தந்த வள்ளல் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அன்றிலிருந்து இனறு வரை கருணாநிதி என்றால், ஊழல்வாதி என்ற அடையாளம் தானே மக்கள் மனதில் நிலையாக நிற்கிறது. இதனை நான் முதலில் சொல்லவில்லை. ஊர் சொல்கிறது. உலகம் சொல்கிறது. நாடே சொல்கிறது. ஏன் உச்சநீதிமன்றமே விஞ்ஞானரீதியான ஊழல்வாதி என சொல்கிறது.
இன்றும் எனது பிறந்தநாட்களையொட்டி என்னுடைய சொந்தப்பணத்தில் நலத்திட்டங்கள் புரிந்து வருகிறேன். வருமானத்தை ஈட்டுவது முக்கியமல்ல. அதை எப்படி செலவு செய்கிறோம் என்பது தான் முக்கியம். என்னை பொறுத்தவரையில் நான் பெறுகிற வருமானத்தில் பெரும் பங்கை ஏழைகளின் வயிற்றில் தான் வைக்கிறேனே தவிர, இரும்பு பெட்டியிலோ அல்லது ஏராளமான சொத்துகளிலோ அல்ல.
மக்களுக்கு உதவி செய்வது என்பது எனக்கு நடிக்க வந்தது முதலே இருந்து வருகிறது. ஆனால் பொதுவாழ்க்கைக்கு வந்து 55 ஆண்டுகள் ஆன பின்னர்தான் அந்த சிந்தனையே கருணாநிதிக்கு வந்தது. அதுவும் 2005ம் ஆண்டில்தான்.
என் முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொள்ள சொல்கிறார். சினிமாவில் கதாநாயகனாக நடிக்கிறவன் நான். ஒவ்வொரு நாளும் எனது முகத்தை நான் பார்த்து மேக்கப் போடாமலா நடிக்க முடியும். நம் முகத்தை நாம் பார்த்துக்கொள்வது பெரிதல்ல. நம் முகத்தை நாட்டு மக்கள் பார்க்க ஆவலோடு இருக்கின்றார்களா என்பதே கேள்வி.
எனது முகத்தைப் பார்க்க லட்சோபம் லட்சம் மக்கள் ஆவலாக உள்ளனர். ஆனால் பிரியாணி, பணம் என எதைக் கொடுத்தாலும் பார்க்கவே விரும்பாத முகங்களும் சில தமிழகத்தில் உள்ளன.
நாம் பிறந்த தமிழ்நாட்டில் ஏழைகளே இனி இருக்க கூடாது என்ற லட்சியத்தோடு தொடங்கப்பட்டது தான் தே.மு.தி.க. கடந்த 5 ஆண்டுகளில் பொது மக்களால், குறிப்பாக ஏழை தாய்மார்களாலும், இளைஞர்களாலும் இன்று தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்க்கப்பட்டுள்ளது. மாற்றார் இதைக் கண்டு பொறாமைப்படுவதில் வியப்பு இல்லை. ஆகவே தான் எங்களை தூற்றி வருகின்றனர். ஆனால் அதைப்பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டில் எனது முகத்தை பார்க்க லட்சோபலட்சம் மக்கள் இன்றைக்கும் ஆர்வமாக உள்ளனர் என்பதே எனக்கு கிடைத்த மாபெரும் சொத்தாகும். நான் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு நன்மை செய்வேன் என்கிற நம்பிக்கையோடு என் முகத்தை மக்கள் பார்க்கிறார்கள். நானும் என் முகத்தை என்னுடைய கண்ணாடியில் பார்ப்பதை விட ஏழை, எளிய மக்களின் முகங்கள் மலர்வதிலேயே நான் என்னை பார்க்க விரும்புகிறேன்.
உயர் பதவிக்கு வந்த பிறகு தங்களது தகுதியை வளர்த்து கொள்ளாமல் ஆணவமும், ஆத்திரமும் கொண்டு அவர்கள் ஏசுகிறார்கள் என்றால் தேமுதிகவின் வளர்ச்சியை காட்டுகிறதே தவிர வேறு அல்ல. என் மீதும், தேமுதிகவின் மீலும் என்னை நம்பி உள்ள லட்சோப லட்ச தூய தொண்டர்கள் மீதும் அவதூறு சேற்றை வீசினால், வீசியவர்கள் மீதுதான் அழுக்கு படுமே தவிர எங்கள் மீது ஒரு துளியும் ஒட்டாது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications