உமாசங்கர் ஐஏஎஸ் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து-டான்சி எம்.டி ஆக நியமனம்
சென்னை: உமாசங்கர் ஐஏஎஸ் அதிகாரி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை அரசு திடீரென ரத்து செய்துள்ளது. அவர் டான்சி நிறுவன நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு கேபிள் டிவி கழகம் தொடர்பாக திமுக அரசு மீதும், முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் மீதும் பல்வேறு புகார்களை சுமத்தியிருந்தார் ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர். இதையடுத்து அவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து விட்டதாக அவர் மீது அரசு குற்றம் சாட்டியது. மேலும் அவர் மீது ஊழல்குற்றச்சாட்டின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் உமாசங்கர். அதை விசாரித்த உயர்நீதிமன்றம், உமாசங்கர் மீதான விசாரணையை தொடங்கலாம். ஆனால் இறுதி விசாரணை முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது.
அதேபோல தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், உமாசங்கர் மீதான நடவடிக்கைகளை அரசு ரத்து செய்துள்ளது. மேலும் அவரை தமிழ்நாடு சிறு தொழில்கள் கழக (டான்சி) நிர்வாக இயக்குநராகவும் நியமித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி நேற்று இரவு வெளியிட்ட உத்தரவில்,
சிறுசேமிப்புத்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சி.உமாசங்கர், போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததன் காரணமாக சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காகவும் அவரது ஜாதி சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்துவதற்காகவும் அகில இந்திய பணிகள் விதிமுறைகளின்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது, விசாரணை தொடங்கப்பட்டு விட்டதால் அவர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை 2.9.2010 முதல் ரத்து செய்யப்படுகிறது. விசாரணையின் முடிவைப் பொருத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த காலம் சரி செய்யப்படும்.
சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டதை தொடர்ந்து அவர் டான்சி நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.எஸ்.பழனியப்பன் கூடுதலாக கவனித்து வந்தார். சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், டான்சி நிறுவனத்தின் தலைவராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரங்கி, குத்சியா காந்திக்கு புது பொறுப்பு:
.
இதேபோல சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் பணியாற்றி வரும் கூடுதல் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக்கழக (டிட்கோ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் கூடுதல் தலைமைச் செயலாளர் குத்சியா காந்தி இடமாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு மின்நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன (பவர் பைனான்ஸ்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications