சேலம் கொலை வழக்கில் என்னைக் களங்கப்படுத்த திமுகவினரே முயற்சிக்கிறார்கள்-வீரபாண்டியார் பரபரப்பு புகார

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலத்தில் நடந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எனது பெயரை களங்கப்படுத்துவதற்காக திமுகவைச் சேர்ந்த சிலரே முயற்சித்து வருகிறார்கள். இது பெரும் வேதனை அளிக்கிறது என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மகன் சிவகுரு கோர்ட்டில் சரணடைந்ததைத் தொடர்ந்து வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடைய மனைவிமாலா, மகன், மகள் யுவப்பிரியா, மருமகன் ரஜினி, சேலம் மாவட்ட பஞ்சாயத்துத் துணைத் தலைவரும், திமுகவைச் சேர்ந்தவரும், வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனுமான சுரேஷ்குமார், அவருடைய உதவியாளர் செந்தில், வழக்கறிஞர் சம்பத் என 8 பேர் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷ் குமாரை சிறைக்குச் சென்று வீரபாண்டி ஆறுமுகம் பார்த்தார். இதை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன.

இந்த நிலையில், சிபிசிஐடி போலீஸார் சுரேஷ்குமார் மீது பொய் வழக்குப் போட்டிருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார் வீரபாண்டி ஆறுமுகம். தற்போது திமுகவினர் சிலரே தனக்கு எதிராக மாறியிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

நான் தி.மு.க.வில் நீண்டகாலமாக பணியாற்றி வருகிறேன். இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சிலர் என்னுடைய புகழை கெடுக்க வேண்டும், என்னுடைய பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பத்திரிகைகளுக்கு தவறான செய்திகளை கொடுத்து வருவதாக அறிகிறேன். அதற்காக அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரை தவறாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

என்னால் கட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, நான் வளர்த்துவிட்ட சிலரே இந்த செயலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளராகவும், சேலம் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் கே.சுரேஷ்குமார் பணியாற்றி வருகிறார். அவர் என் சின்ன தாயாரின் பேரனும், தம்பி மகனுமாவார். அவரை இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். அவரை நான் சிறைக்கு சென்று பார்த்து வந்தேன். இதில் எந்தவித தவறும் இல்லை.

தேவையில்லாமல் இந்த வழக்கில் என்னை களங்கப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, தி.மு.க. கட்சியில் உள்ள ஒரு சிலரே சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தொடர்பு கொண்டும், பொய் கடிதம் அனுப்பி வைத்துக்கொண்டும் இருப்பதாக எனக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன.

இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.

ஆனால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தி.மு.கழகத்தின் பெயரை கெடுக்க வேண்டும், களங்கப்படுத்த வேண்டும் என்று தி.மு.க.வில் உள்ள ஒரு சிலர் ஈடுபடுவதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாதகமாக எடுத்துக்கொண்டு கழக தோழர்களை மிரட்ட முயற்சிப்பதை நான் கண்டிக்காமலும் விட்டுவிட முடியாது.

இந்த வழக்கு சம்பந்தமாக இன்றைய தேதி வரை மாவட்டத்தில் உள்ள எந்த சட்டம் ஒழுங்கு அதிகாரியையோ, வேறு எந்த காவல்துறை அதிகாரிகளையோ நான் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரையும் நான் எவ்வித தொடர்பும் கொள்ளவில்லை.

இந்த நிலையில் பத்திரிகைகளுக்கு தவறான செய்திகளை கொடுத்து கழகத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சில புல்லுருவிகள் தோன்றி இருப்பதுதான் எனக்கு வேதனையை அளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக கிளம்பியுள்ளவர்கள் யார் என்பது குறித்து வீரபாண்டியார் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால் விரைவில் இதுகுறித்து முதல்வரிடம் அவர் நேரில் முறையிடலாம் என்று தெரிகிறது. வீரபாண்டியாரின் இந்தப் புகார் திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+