பீகார் மாநிலம் வளராமல் போக லாலு, நிதீஷ்தான் காரணம்-சோனியா பாய்ச்சல்
பாபுவா/பக்ஸார் (பீகார்): பீகார் மாநிலம் வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையிலேயே இருக்க முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும், தற்போதைய முதல்வர் நிதீஷ் குமாரும்தான் காரணம் என்று கடுமையாக கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
பீகார் மாநில சட்டசபைத்தேர்தலின் இறுதிக் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் சோனியா ஈடுபட்டுள்ளார். பாபுவா, பக்ஸார் பகுதிகளில் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக பீகாரை காங்கிரஸ் அல்லாத அரசுகள்தான் ஆட்சி புரிந்து வருகின்றன. இதனால்தான் பீகார் மாநிலம் எந்த வளர்ச்சியையும் காணாமல் பின் தங்கிப் போய்க் கிடக்கிறது.
மத்திய அரசு ஏழை மக்களுக்காக பல ஆயிரக்கணக்கான நிதியை ஒதுக்கிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் தற்போதைய பாஜக கூட்டணி அரசு அதை பயன்படுத்தாமல் வீணடித்துக் கொண்டிருக்கிறது.
எனவே தங்களது எதிர்காலம் பிரகாசமாக அமைய, பீகார் மாநிலம் வளர்ச்சி பெற மக்கள் விழித்தெழ வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் அல்லாத அரசுகளால் சந்தித்து வரும் பின்தங்கிய நிலைமை, வறுமையை விரட்ட காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் சோனியா.
கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பகுதியை லாலு பிரசாத் யாதவும், அவரது மனைவி ராப்ரி தேவியும்தான் ஆட்சி புரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications