அதிமுக போட்ட சொத்துக் குவிப்பு வழக்கு-அமைச்சர் சுரேஷ்ராஜன், பெற்றோர் விடுதலை

1996-2001ல் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.17.20 லட்சம் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை சேர்த்ததாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் அதிமுக ஆட்சியில் வழக்குத் தொடர்ந்தனர்.
பொது வாழ்க்கையில் இருந்து கொண்டு சுயலாப நோக்கத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் இந்த குற்றத்துக்கு தூண்டுதலாக இருந்தாக அவரது தந்தை நீலகண்ட பிள்ளை, தாயார் ராஜம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை நாகர்கோவில் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த சொத்துகள் பற்றி அவர்களிடம் கணக்கு கேட்கப்பட்டது என்றும், அவர்கள் கொடுத்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்பதால் வழக்கு தொடரப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சுரேஷ்ராஜன் மற்றும் அவரது பெற்றோர், நாகர்கோவில் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை 2009ம் ஆண்டு மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சுரேஷ்ராஜன் உள்பட 3 பேரும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் பிறப்பித்த உத்தரவில்,
நீலகண்ட பிள்ளை மற்றும் ராஜம் பெயரில் காணப்படும் சொத்துகளை சுரேஷ் ராஜனின் சொத்துகளாக எடுத்துக்கொள்ள முடியாது. சுரேஷ் பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை ராஜம் நடத்தி வருகிறார். வருமானவரி செலுத்துகிறார். நீலகண்ட பிள்ளை தலைமை ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று பென்சன் வாங்குகிறார்.
அந்த வகையில் அவர்களுக்கு வரும் வருமானத்தை சுரேஷ் ராஜனின் சொத்தாக எப்படி காட்ட முடியும்?. தனிப்பட்ட ஒவ்வொருவரது வருமானம் என்னவாக இருந்தது என்பதற்கான விசாரணை நடத்தப்படவில்லை. சுரேஷ் ராஜனின் பணம் அவரது பெற்றோரின் கைகளுக்கு போய் சேர்ந்ததற்கான எந்தவொரு ஆதாரத்தையும் போலீஸார் காட்டவில்லை.
எனவே சுரேஷ் ராஜனின் சொத்துகளை அவரது பெற்றோர் தங்கள் பெயரில் வைத்திருந்தனர் என்று சொல்வதை ஏற்க முடியாது.
மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதற்காக சுரேஷ் ராஜனுக்கு அவரது பெற்றோர் 2 பேரும் தூண்டுதலாக இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் காட்டப்படவில்லை.
நீலகண்ட பிள்ளை மற்றும் ராஜத்தின் பெயரில் உள்ள சொத்துகளை சுரேஷ் ராஜனின் சொத்துகளாக சேர்த்து கணக்கிடும்படி கூறுவது ஏன் என்பதற்கு, ஏற்றுக் கொள்ளத்தக்க காரணங்களை போலீசார் கூறவில்லை.
பெற்றோரின் சொத்துகளை தவிர்த்து பார்த்தால், சுரேஷ் ராஜன் தனது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
எனவே அவர்கள் 3 பேர் மீதும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. எனவே அந்த குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவர்களை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்க மறுத்து தலைமை மாஜிஸ்திரேட்டு பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications