மீண்டும் விசுவரூபம் எடுக்கிறது போபர்ஸ் ஆயுத பேர ஊழல்!

இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பீரங்கி வாங்கப்பட்டதில் ரூ.1500 கோடி அளவில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 1989-ம் ஆண்டில் வெளிச்சத்துக்கு வந்த இந்த ஊழல் விவகாரத்தால் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி பதவி இழந்து, புதிய பிரதமராக வி.பி.சிங் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் இடைத் தரகராக செயல்பட்ட வின்சத்தாவும் இத்தாலிய தொழில் அதிபர் ஒட்டாவா குவாத்ரோச்சியும் ஏறத்தாழ ரூ.64 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ., குவாத்ரோச்சிக்கு இந்த ஊழலில் எந்த தொடர்பும் இல்லை என்று நற்சான்று வழங்கி இருந்தது.
குவாத்ரோச்சியின் வங்கி கணக்கு முடக்கத்தையும் சி.பி.ஐ. நீக்கிவிட்டது. இதற்கிடையில் வின்சத்தா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு எதிரான வழக்கும் கைவிடப்பட்டது. குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கையும் கைவிடுவதற்காக, டெல்லி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 1987-88-ம் ஆண்டுக்கான வருமான வரி பாக்கியை செலுத்தும்படி வருமான வரித்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து வின்சத்தாவின் மகன் ஹெர்ஷ் என்பவர், வருமான வரி மேல் முறையீடு தீர்ப்பாயத்தில் (டிரிபியூனல்) வழக்கு தொடர்ந்திருந்தார்.
மீண்டும் விசுவரூபம் எடுக்கும் போபர்ஸ்
நீதிபதிகள் ஆர்.சி.சர்மா, ஆர்.பி.துலானி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து, கடந்த 31-ந்தேதியன்று தீர்ப்புக் கூறியது. அப்பீல் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இடைத் தரகர் வின்சத்தா, தொழில் அதிபர் குவாத்ரோச்சி ஆகியோருக்கு ரூ.41 கோடி கமிஷனாக வழங்கப்பட்டு இருப்பதாக தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் அந்த தொகை வழங்கப்பட்டிருப்பதால் அதற்கான வருமான வரியை செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. (ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவதில் கமிஷன் பெறுவது சட்டவிரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.) இந்த தீர்ப்பின் மூலம் போபர்ஸ் ஆயுத பேர ஊழல் மீண்டும் விசுவரூபம் எடுத்து உள்ளது.
ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த தீர்ப்பை தொடர்ந்து போபர்ஸ் கமிஷன் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று, பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண்ஜெட்லி வற்புறுத்தி இருக்கிறார்.
"இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., எந்தவித கமிஷனும் வழங்கப்படவில்லை என்று கூறி வந்தது. தற்போது மத்திய அரசின் வருமான வரித்துறை டிரிபியூனல் வழங்கியுள்ள இந்த தீர்ப்பில், கமிஷன் வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விசித்திரமான சூழ்நிலையில், இந்த விசாரணை அவசியம்'' என்று, அவர் விளக்கம் அளித்தார்.
'ஊழல் ஒழிப்பை உடனே தொடங்குங்கள்'
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில், ஊழலை ஒழிக்க 5 அம்ச திட்டம் ஒன்றை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்து இருந்தார்.
அதை சுட்டிக்காட்டிய அருண்ஜெட்லி, "ஊழலுக்கு எதிராக 5 அம்ச திட்டம் தேவை இல்லை. குற்றவாளிகளை ஜெயிலுக்கு அனுப்பும் ஒரு அம்ச திட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளதாக'' அருண் ஜெட்லி குறிப்பிட்டு இருக்கிறார்.
கருத்து சொல்ல காங்கிரஸ் மறுப்பு
இதற்கிடையில், இந்த தீர்ப்பு குறித்து உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. நேற்று டெல்லியில் நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளரிடம் இது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் அது குறித்து அறிந்தோம். தீர்ப்பு விவரங்களை முழுமையாக படித்து பார்த்த பிறகு தான் அதுபற்றி கருத்து சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications