சட்டசபை: 9 அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் சுர்ஜித் சி்ங் பர்னாலாவின் உரையுடன் கூட்டம் தொடங்கியது.
அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளைக் கண்டித்து கருப்புச் சட்டையுடன் வந்திருந்தனர். காய்கறி மாலைகள் அணிந்தும், கருப்பு சால்வை அணிந்தும் அவர்கள் வந்திருந்தனர்.
ஆளுநர் உரையாற்றத் தொடங்கியபோது அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து பேசத் தொடங்கினர். இதையடுத்து ஆளுநர் உரையாற்றுவதில் பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து அனைவரையும் வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார். இதையடுத்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மதிமுக, இடதுசாரி எம்எல்ஏக்கள் நாகரீகமாக வெளியேறினர்.
ஆனால், அதிமுக உறுப்பினர்கள் அவைக் காவலர்களுடன் மோதலில் ஈடுபட்டதோடு பெரும் கூச்சல், குழப்பத்தையும் உருவாக்கினர். இவர்களால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.
இந் நிலையில் இன்று பொள்ளாச்சி ஜெயராமன், கேபாண்டுரங்கன், டி.ஜெயகுமார், திருத்தணி கோ ஹரி, வேலுமணி, ரவிச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் பாலாஜி, சி.வி.சண்முகம் ஆகிய 9 அதிமுக எம்எல்ஏக்களையும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அவை முன்னவரும் நிதியமைச்சருமான அன்பழகன் கொண்டு வந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் அவர்கள் 9 பேரையும் சஸ்பெண்ட் செய்ததுடன், அவர்களை அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து 9 பேரும் அவைக் காவலர்களால் அவையிலிருநத்து வெளியேற்றப்பட்டனர். (அட, 9 ஜெயலலிதாவுக்கு ராசியான நம்பராச்சே!).
எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு:
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிற அதிமுக எம்எல்ஏக்களும், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
திரும்பி வந்து விவாதம்:
பின்னர் சஸ்பெண்ட் ஆன 9 எம்.எல்.ஏக்கள் தவிர அனைவரும் மீண்டும் அவைக்குத் திரும்பி விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த விவாதம்:
செங்கோட்டையன் (அதிமுக): சஸ்பெண்ட் செய்யப்பட்ட 9 எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆளுநர் உரை நிகழ்த்தியபோது எங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க முடியாது. கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது ஆளுநர் தான் வெளியேறினாரே தவிர உறுப்பினர்கள் வெளியேற்றப்படவில்லை.
அமைச்சர் அன்பழகன்: இந்த சட்டமன்றத்தில் நடவடிக்கையை இந்த சட்டமன்றம்தான் முடிவு செய்யும். வேறு சட்டமன்ற நடவடிக்கைகளை வழிகாட்டியாக எடுக்கமுடியாது.
சபாநாயகர் ஆவுடையப்பன்: 9 உறுப்பினர்களின் சஸ்பெண்ட் இந்த அவையால் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. இனி சபையில் தீர்மானம் மீண்டும் கொண்டு வந்தால் தான் ரத்து செய்ய முடியும்.
செங்கோட்டையன்: இன்று நீங்கள் எடுத்த நடவடிக்கைக்கு நான் எந்த கருத்தும் சொல்லவில்லை.
சபாநாயகர்: செங்கோட்டையன் நீங்கள் உங்கள் வேண்டுகோளை வைத்து விட்டீர்கள். அமருங்கள்.
(அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். மதிமுக, இடதுசாரி எம்எல்ஏக்களும் எழுந்து நின்றனர்)
சபாநாயகர்: சபைக்கு நீங்கள் குந்தகம் விளைவிக்கக் கூடாது. உங்கள் கோரிக்கையை சொல்லி விட்டீர்கள். இதற்கு பிறகும் பேச ஒன்றும் இல்லை. உட்காருங்கள் தேவை இல்லாமல் சத்தம் போடாதீர்கள். கவர்னர் உரை மீது திமுக உறுப்பினர் குத்தாலம் அன்பழகன் பேசலாம்.
(குத்தாலம் அன்பழகன் பேச தொடங்கிய பின்னரும் அதிமுக, மதிமுக, இடதுசாரி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து நின்றபடி கூச்சலிட்டனர்)
அமைச்சர் துரைமுருகன்: நடந்து முடிந்தது பற்றி பேச முடியாது.
சபாநாயகர்: எதிர்க் கட்சியினர் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இதில் முடிவு எடுத்து சொல்லப்படும்.
பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஆளுநர் உரை அனைவராலும் மதிக்கப்பட வேண்டியது. அதை கேட்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது....
துரைமுருகன்: அது நடந்து முடிந்தது. மீண்டும் ஆளுநர் உரை பற்றி பேசக் கூடாது.
பாலபாரதி: தீர்ப்பு கடுமையாக உள்ளது. எதிர்க்கட்சியினரை பாதுகாக்கும் கடமையும் சபாநாயகருக்கு உள்ளது. எனவே தீர்ப்பை மறுபரிசீலனை செய்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களை நாளை சபைக்கு வரவழைக்க பரிசீலிக்க வேண்டும்.
(அப்போது அதிமுக எம்எல்ஏ சின்னசாமி சபாநாயகரை ஒருமையில் பேசினார். இதையடுத்து அவரை எச்சரித்த சபாநாயகர், மரியாதை குறைவாக பேசுவது சரியல்ல என்றார்).
சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): 9 பேர் மீதான தண்டனை கடுமையானது. அதைத் திரும்ப பெற வேண்டும். இன்றே அவர்களை சபைக்கு வரவழைக்க வேண்டும்.
''சின்னசாமி பி கேர் புள்":
(அப்போது சின்னச்சாமி மீண்டும் குறுக்கிட்டு கத்தினார். இதையடுத்து சபாநாயகர் அவரைப் பார்த்து, ''சின்னசாமி பி கேர் புள்" என்றார்)
சதன் திருமலைகுமார் (மதிமுக): எம்.எல்.ஏக்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
அமைச்சர் அன்பழகன்: எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்துவது போல இங்கே கூச்சல் போடுகின்றனர். இது அன்றைய தினம் நடந்த சம்பவத்தை உறுதிபடுத்துவது போல உள்ளது. இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் உடனே முடிவெடுக்க முடியாது. மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துதான் அறிவிக்க முடியும்.
இதையடுத்து அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அவைக்குத் திரும்பிய அவர்கள், 9 அதிமுக உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடு்த்தனர். அந்தக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.
இதையடுத்து மீண்டும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த அவர்கள் அவை வாயிலில் நின்றபடி அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவைக்கு செல்லும் வழியில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
சபாநாயகரை கிண்டல் செய்து டிராமா:
அப்போது சபாநாயகர் ஆவுடையப்பனை கேலி செய்யும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு 'ஆன்-த-ஸ்பாட்' நாடகமும் போட்டனர்.
இருக்கையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சபநாயகர் போல அமர்ந்து கொள்ள, அவரிடம் எம்.எல்.ஏக்கள் முறையிட, அவர் சபாநாயகர் போல பதில் கூற.. நாடகம் நடந்தது. இதை அவர்களே கைகளைத் தட்டி ரசித்துக் கொண்டனர்.
பின்னர் முதல்வர் கருணாநிதி பதில் சொல்வது போலவும் அதிமுக எம்எல்ஏக்கள் நடித்துக் காட்டினர்.












Click it and Unblock the Notifications