யாரிடமும் கட்சியை அடகு வைக்க மாட்டேன்-கூட்டணி குறித்து விஜயகாந்த் குழப்பப் பேச்சு

Subscribe to Oneindia Tamil

Vijayakanth at Salem conference
சேலம்: திமுகவையும், திமுக ஆட்சியையும், திமுக தலைவர் கருணாநிதியையும், முதல்வர் கருணாநிதியையும், காவல்துறையையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி சேருவோமா, சேர்ந்தால் யாருடன் சேர்வோம் என்பது குறித்து யாருக்கும் புரியாத வகையில் படு குழப்பமாக பேசியுள்ளார் சேலத்தில் நேற்று நடந்த பிரமாண்டமான மாநில மாநாட்டில்.

தேமுதிக வரலாற்றில் நேற்றைய சேலம் மாநாடு மிகப் பெரியதாக அமைந்துள்ளது. பல லட்சம் பேர் திரண்டு வந்ததால் சேலமே குலுங்கிப் போனது என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தனை பேர் திரண்டு வந்ததோடு, சென்னையிலிருந்தும், மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் சேலம் மாநாட்டுத் திடல் வரை பலஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு கட்சியினர் வைத்திருந்த பேனர்களும், புதிய சாதனை படைத்து விட்டன.

50 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தேமுதிக மாநாட்டு மேடையில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் அறிவித்தார். அத்தனை பேர் வந்திருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவிட்டாலும் கூட சமீப காலத்தில் தமிழகத்தில் நடந்த அரசியல் கூட்டங்களுக்கு வந்ததை விட பல மடங்கு கூட்டம் இங்கு திரண்டிருந்தது என்பது உண்மை.

இத்தனை பேரும் இப்படி படையெடுத்து வந்ததற்கு ஒரே காரணம்- தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவிக்கப் போகிறார் என்ற பலத்த எதிர்பார்ப்புதான். இதை உறுதி செய்வது போலவே தேமுதிக நிர்வாகிகள் நேற்று மாநாட்டு மேடையில் கடுமையாக திமுகவைத் தாக்கிப் பேசினர்.

சரி, திமுகவுடன் கூட்டணி இல்லை, அப்படியானால் அதிமுகவுடன்தான் கூட்டணி என்ற எதிர்பார்ப்புக்குள் தேமுதிகவினர் போக ஆரம்பித்து விட்டனர். திமுகவையும், திமுக ஆட்சியையும், காவல்துறையையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினர் நேற்றைய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தேமுதிக நிர்வாகிகள்.

கடைசியாக விஜயகாந்த் பேச வந்தார் இரவு 9 மணியளவில். கேப்டன் தனது கூட்டணி குறித்த முடிவை வெளியிடப் போவதை ஆவலுடன் கேட்க தொண்டர்கள் தயாரானபோது நிறுத்தி, நிதானமாக, விலாவாரியாகப் பேச ஆரம்பித்தார் விஜயகாந்த். ஆனால் அவரது பேச்சில் கூட்டணி குறித்து குறிப்பிடவில்லை. அதை அவரே சுட்டிக் காட்டி கடைசியாகப் பேசுகிறேன் என்றார். கூட்டத்தினரும் பொறுமையுடன் காத்திருந்தனர். இருந்தாலும் கடைசி வரை இவருடன்தான் கூட்டணி, இந்தக் கட்சியுடன்தான் கூட்டணி என்பதை விஜயகாந்த் சொல்லவே இல்லை.

தனது பேச்சின்போது இடை இடையே, என்னாலும் வேகமாக, கோபமாகப் பேச முடியும். ஆனால் அப்படிப் பேசினால் நாக்கு தடுமாறும் என்பதால் அப்படிப் பேசாமல் பொறுமையாக, மெதுவாகப் பேசுகிறேன் என்றார் விஜயகாந்த். அதேசமயம், விஜயகாந்த் இப்படி மிக மிக நிதானமாக இதுவரை பேசியதே இல்லை என்று கூறும் அளவுக்கு மகா நிதானமாக ஒவ்வொரு பிரச்சினையாக போய்ப் போய் வந்தார். தனது பேச்சில் முதல்வர் கருணாநிதியைமிகக் காட்டமாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில் ஓநாய் என்று கூட கூறினார். பொய் பேசுபவர் என்றார், வரலாற்றை மாற்றிச் சொல்பவர் என்றார், ஊழலுக்குப் பொறுப்பாளி என்றார். அழகிரியையும் விடவில்லை, ஸ்டாலினையும் விடவில்லை. வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்த்து எங்களுக்கு என்ன பயம் என்றார்.

ஒரு கட்டத்தில் கூட்டத்தினர் நெளிய ஆரம்பித்ததைப் பார்த்த விஜயகாந்த், நாம் கூட்டணி வைக்க வேண்டுமா என்று ஜெயலலிதா ஸ்டைலில் தொண்டர்களைப் பார்த்துக் கேட்டார். கூட்டணி வேண்டும் என்று சொல்பவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்று கேட்க கிட்டத்தட்ட அத்தனை பேருமே கையை உயர்த்தி தங்களது இத்தனை கால விருப்பத்தை ஒரே குரலில் வெளிப்படுத்தினர். இதை விஜயகாந்த்தே எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து கூட்டணி வேண்டாம் என்று சொல்பவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்று அவர் கூறியபோது கொஞ்சம் பேரே கைகளை உயர்த்தினர். இதையடுத்து அவர் ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ, சட்டசபையில் இப்படி கேட்டு முடித்தவுடன் பெரும்பான்மையானோர் கைகளை உயர்த்தியதால் அதுவே வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். ஆனால் நான் அப்படிக் கூற மாட்டேன். மாறாக, உங்களையும், என்னையும், நமது கட்சியையும் யாரிடமும் அடகு வைக்க மாட்டேன் என்று குழப்பமாக பதிலளித்து நிறுத்தினார்.

தனது பதில் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதை அவரே உணர்ந்தோ என்னவோ பேசி முடித்து விடை பெற்ற பிறகு மீண்டும் மைக்கைப் பிடித்து, கூட்டணி முடிவு குறித்து என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொண்டு விடை பெற்றார்.

மொத்தத்தில் நேற்று விஜயகாந்த் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதே உண்மை. இதை கலைந்து சென்ற தொண்டர்களும் வெளிப்படுத்தினர். கேப்டன், தெளிவாச் சொல்லாம விட்டுட்டாரே என்று அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்க முடிந்தது. ஆனாலும் கூட்டணிக்கு தொண்டர்கள் ஆதரவாக இருப்பதை அவர் உணர்ந்து வி்ட்டார். எனவே கண்டிப்பாக கூட்டணி வரும் என்று அவர்கள் ஆறுதல்பட்டுக் கலைந்து சென்றனர்.

சேலத்தை உலுக்கிய தொண்டர்கள்

இதுவரை தேமுதிக மாநாடு அல்லது கூட்டத்திற்கு இப்படி ஒரு மக்கள் கூட்டம் வந்ததில்லை என்று கூறும் அளவுக்கு நேற்றைய சேலம் மாநாடு அமைந்து விட்டது. அந்த அளவுக்கு பல லட்சம் பேர் திரண்டு வந்திருந்தனர்.

மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் நடந்த இந்த மாநாட்டையொட்டி சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமையகத்திலிருந்தும், தமிழகத்தின் பிற நகரங்களிலிருந்தும் சேலம் மாநாட்டுத் திடல் வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்தொலைவுக்கு பிளக்ஸ் பேனர்களை வைத்து அசத்தி விட்டனர் தேமுதிகவினர்.

வரவேற்பு வளைவுகள், பேனர்கள், தோரணங்கள், கட்சிக் கொடிகள் என, சேலம் நகரமே திமிலோகப்பட்டு விட்டது. சேலத்தைச் சுற்றிலும் உள்ள சாலைகள் அனைத்தும் தேமுகவினர் மயமாக காணப்பட்டது. சேலத்தை மக்கள் வெள்ளம் சூழ்ந்து விட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு மிகப் பெரிய கூட்டம்.


சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரோட்டில் மாலை 4 மணியில் இருந்து இரவு 8 மணி வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்கள் எறும்பு போல ஊர்ந்து விழா மேடைக்கு அருகில் வந்து சேர்ந்தது.

தே.மு.தி.க., சார்பில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பத்திரிக்கை நிருபர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். சில நிர்வாகிகள் கெடுபிடி செய்ததால் தொண்டர் படையினர் அவர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர்.

நிர்வாகிகளுக்கு சாம்பார்-தொண்டர்களுக்குத் தயிர்

பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை 4 மணிக்கு திரளான தொண்டர்கள் விழா மேடைக்கு வந்தனர். கட்சி நிர்வாகிகளுக்கு சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் வழங்கப்பட்டது. கட்சி தொண்டர்களுக்கு தயிர்சாதம் வழங்கப்பட்டது.

தே.மு.தி.க., பெண் தொண்டர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. விழாவில் திரளான அரவாணிகள் பங்கேற்றனர். பெண்கள் கூட்டத்தை அதிகம் காண முடிந்தது.

பத்திரிக்கை நிருபர்கள் செய்திகளை அனுப்புவதற்கு வசதியாக இன்டர்நெட் இணைப்பு வசதியை செய்து கொடுத்திருந்தது வித்தியாசமானதாக இருந்தது.

மாநாட்டுக்கு ஆறு வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக மாநாட்டு திடலுக்கு வெளியில் இருந்து மாநாட்டு மேடைக்கு விஜயகாந்த் இரவு 7.25 மணிக்கு நடந்து வந்தார். அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பளிக்கப்பட்டது.

மாநாட்டில் 10 நிமிடம் லேசர் லைட் நிகழ்ச்சி நடைபெற்றது. எம்.ஜி.ஆர். மற்றும் விஜயகாந்த் படப் பாடல்களை வைத்து இதை அமைத்திருந்தனர். கட்சிப் பிரசாரப் பாடலும் இதில் இடம் பெற்றது.

மாநாடு துவங்கிய அரை மணி நேரத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த தே.மு.தி.க., தொண்டர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு, கற்களையும், பாட்டில்களையும் தூக்கி வீசி கொண்டிருந்தனர்.

ஜெயா டிவி காமிரா மேன் ரியாசுதீன் மற்றும் கட்சி தொண்டர் இருவர் உள்பட மூன்று பேரின் மண்டை உடைந்தது. இந்த சம்பவத்துக்கு நிருபர்கள் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கல்வீசிய ஒரு ஆசாமி பிடிபட்டான். ஆனால், கல்வீச்சு சம்பவம் நின்றபாடில்லை.

மாநாட்டில் தொண்டர் படையை சேர்ந்த அனைவருக்கும் வாக்கி-டாக்கி வழங்கப்பட்டிருந்தது. தொண்டர்கள் பார்வையிடுவதற்காக இரண்டு மெகா சைஸ் ஸ்கிரீன் வைக்கப்பட்டிருந்தது.

மாநாட்டு திடலின் மூன்று இடங்களில் தேர்தல் நன்கொடை உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்புப் பணியில் 2000 போலீஸார் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நூற்றுக்கும் குறைவான போலீஸாரே இருந்ததாக தெரிகிறது. அதேசமயம் தேமுதிக தொண்டர் படையினர் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் நிதி வசூலிக்க உண்டியல்

தேர்தல் நிதி வசூலிக்க மாநாட்டுத் திடலில் பெரிய உண்டியலை வைத்திருந்தனர். தேர்தல் நிதியாக, முதல் நபராக திருவள்ளூர் மாவட்ட தேமுதிக சார்பில் ரூ. 51 லட்சம் ரொக்கமாக மேடையில் வைத்துக் கொடுக்கப்பட்டது.

இதுபோக, விஜயகாந்துக்கு வெள்ளி செங்கோல், தங்க நிற செங்கோல், வீரவாள், முரசு சின்னம் உள்ளிட்டவையும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

காலையிலேயே மட்டன்-பிரேமலதா பெருமிதம்

கூட்டத்தில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா பேசுகையில், சேலத்தின் சிறப்புகளை பாராட்டிப் பேசினார். அதிலும் சேலத்தில் சாப்பாடு பிரமாதம் என்று கூறிய அவர் மற்ற ஊர்களில் வாரத்திற்கு 2 நாட்கள்தான் அசைவம் சாப்பிடுவார்கள். ஆனால் சேலத்திலோ காலையிலேயே மட்டன் சாப்பாடு சாப்பிடுகிறார்கள். அதிலும், சேலம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் வீட்டில் சாப்பிடுவது என்றால் கேப்டனுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று கூறி சாப்பாட்டிலிருந்து தனது பேச்சைத் தொடங்கினார்.

கட்சியின் பெயரை முதலிலிருந்து கடைசி வரை தேசிய முற்போக்குத் திராவிட கழகம் என்று முழுமையாக சொன்னவர் இவர் மட்டுமே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+