தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை-வைகோவுக்கு பிரதமர் பதில்
சென்னை: தமிழக மீனவர்கள் கடலில் தாக்கப்படும் செயல்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஜனவரி 22ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கயல்விழியை விடுவித்துத் தமிழகம் கொண்டு வந்தது சேர்த்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்தும், தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் பிரதமரிடம் கடிதத்தைக் கொடுத்து, தனது கருத்துகளையும் தெரிவித்தார்.
ஆனால், அதே நாளில் புஷ்பவனத்தைச் சார்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி குறித்து அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்து ஜனவரி 23ஆம் தேதி வைகோ பிரதமருக்குத் தொலைநகல் செய்தி (ஃபேக்ஸ்) அனுப்பினார்.
இதுகுறித்து பிரதமர் எழுதியுள்ள பதில் கடிதம்:
2011 ஜனவரி 23ஆம் தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கடிதத்தில், பாக் வளைகுடாவில் நமது மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் குறிப்பிட்டு இருந்தீர்கள்.
ஜனவரி 22ஆம் தேதி என்னைச் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்து என்னிடம் கூறியபோது, நம்முடைய இந்திய மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைத் தடுக்க, நம்முடைய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும் என்று நான் உங்களுக்கு உறுதி அளித்து இருந்தேன்.
அதன்படி, இந்தியாவின் வெளியுறவுத்துறைச் செயலர், அதிகாரிகள் மற்றும் தமிழக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரை இலங்கைக்கு அனுப்பி, இலங்கை அரசுடன் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து நம்முடைய மீனவர்கள் நலனைக் காக்க வேண்டிய வழிமுறைகளைக் கண்டறிய முடிவு செய்து உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார் என மதிமுக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications