தவெக எம்.எல்.ஏவின் காரை மறித்து சொந்த கட்சி தொண்டர்களே வாக்குவாதம்.. மதுரையில் பரபரப்பு!
மதுரை: மதுரையில் தவெக எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனை சொந்தக் கட்சி தொண்டர்களே முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சியில் உழைத்தவர்களுக்கு பதவி தராமல், மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்பு கொடுப்பதாக கூறி தொண்டர்கள் தகராறு செய்துள்ளனர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று, தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைத்துள்ள சூழலில், தவெகவில் உட்கட்சிப் பூசல்களும் தற்போது வெடித்துள்ளன. மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தவெக மாவட்டச் செயலாளருமான எஸ்.ஆர். தங்கப்பாண்டியன், மதுரை விளாங்குடி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாமினைத் தொடங்கி வைக்கச் சென்றபோது, அவரது சொந்தக் கட்சித் தொண்டர்களே அவரது காரை முற்றுகையிட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விளாங்குடி முகாமிற்கு கார்கள் புடைசூழ வந்து இறங்கிய எம்.எல்.ஏ தங்கபாண்டியனை தவெக தொண்டர்கள் சூழ்ந்துகொண்டனர். காரை விட்டு கீழே இறங்குமாறு அவர்கள் வற்புறுத்திய நிலையில், அவர் இறங்க மறுத்து காரில் இருந்தபடியே பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தொண்டர்கள், "தேர்தலில் உங்களுக்காக நாங்கள் இரவு பகலாக உழைத்து உங்களை ஜெயிக்க வைத்தோம். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே உழைத்த எங்களுக்குக் கட்சியில் எந்தப் பதவியும் தராமல், மாற்றுக்கட்சிகளில் இருந்து அண்மையில் வந்தவர்களுக்கு உடனடியாகப் பதவிகளை அள்ளி வழங்கியிருப்பது எந்த விதத்தில் நியாயம்?" என்று கேள்விகளை எழுப்பினர்.
தவெக தொண்டர்களின் கேள்விகளால் தடுமாறிய எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன், கோபத்தின் உச்சிக்கே சென்றார். "நான் இந்தத் தெருவுக்குள் வர வேண்டுமா வேண்டாமா? எதுவாக இருந்தாலும் மனுவா கொடுங்க.. இங்கு பேச முடியாது" என்று ஆவேசமாகப் பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து தொண்டர்கள் குரல் எழுப்பியதால், எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் அங்கிருந்து தனது காரில் வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். ஏற்கனவே, தவெக பெண் நிர்வாகி ஒருவர், எம்.எல்.ஏ தங்கபாண்டியன் மற்றும் அவரது மகன் மீது கட்சிப் பதவிக்காகப் பணம் பெற்றதாகப் புகார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சொந்தக் கட்சி தொண்டர்களே காரை மறித்து முற்றுகையிட்ட சம்பவம் தவெக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications