'ஜெ. ஓய்வு': பெங்களூர் நீதி்மன்ற சொத்து குவிப்பு வழக்கில் நீதியை வளைக்கும் தந்திரம்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு என்று சட்டபையில் அதிமுக தீர்மானம் கொண்டு வந்தது பெங்களூர் நீதி்மன்றத்தில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கில் நீதியை வளைக்கும் தந்திரம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன் சட்டசபையில் அதிமுக ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. அதில், ஜெயலலிதாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் பர்பூரணமான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், இதனால் அவர் சட்டசபைக்கு வராமல் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், என்ன நோய் என்ற விவரம் அதில் இல்லை. இந்தத் தீர்மானத்தை திமுக நிறைவேற்ற அனுமதித்தது.

மறுநாள் பெங்களூர் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என அரசு வழக்கறி்ஞர் கோரினார். ஆனால், சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு உடல் நலமில்லை என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சுட்டிக் காட்டிய ஜெயலலிதாவின் வழக்கறிஞர், அவர் நேரில் ஆஜராக முடியாது என்று வாதாடினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் பிரச்சாரம் செய்யவும் செல்லாமல் ஜெயலலிதா ஓய்வெடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந் நிலையில் பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் தி.மு.க.வில் இணையும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

அதில் பாஜக இலக்கிய அணி முன்னாள் தலைவர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்தவர்களும் அதிமுக நிர்வாகிகள் தலைமையிலும் ஆயிரக்கணக்கானோர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர்.

அப்போது கருணாநிதி கூறியதாவது: இங்கே காசி முத்துமாணிக்கம் பேசும்போது, பலமுறை தலைவரிடத்திலும், மற்றும் கழக முன்னணியினரிடத்திலும் நாங்கள் கோரிக்கை வைத்து இன்றுதான் அது நிறைவேறி இருக்கிறது'' என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நாங்களும்; உங்களுடைய வருகையை நீண்டகாலமாக எதிர்பார்த்து அது இன்றைக்குத்தான் நிறைவேறியிருக்கிறது என்ற மகிழ்ச்சியோடு அண்ணா அறிவாலயத்திலே உங்களையெல்லாம் சந்திக்கின்ற இந்த இனிய வாய்ப்பை, அரிய வாய்ப்பை நானும், நம்முடைய பேராசிரியரும் மற்றுமுள்ள கழக முன்னணியினரும், நிர்வாகிகளும் பெற்றிருக்கிறோம்.

இப்படி பல நிகழ்வுகள், பல நேரங்களிலே திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரையிலே நடந்திருக்கின்றன. அவற்றிற்கெல்லாம் மேலாக இங்கே வந்து சேர்வதற்கு முன்பே, இணைவதற்கு முன்பே வேறு இயக்கத்திலே தங்களை அடையாளப்படுத்தி கொண்டாலும், தி.மு.கவில் இருப்பதைப் போலவே, நம்முடைய காசி முத்துமாணிக்கம் அவர்கள் எங்களிடத்திலே பழகியிருக்கின்றார். அதனால்தான் அவர் இன்றைக்கு வந்து சேர்ந்தபோது, புதிதாக யாரோ ஒருவர் இங்கு வந்து சேர்வதை போல் எங்களுக்கு தெரியவில்லை. இங்கே இருப்பவர்தான்-அங்கே போய் இங்கே வந்து சேருகிறார் என்ற அந்த உணர்வுதான் எனக்கு, முத்துமாணிக்கத்தை பொறுத்தவரையில் ஏற்படுகிறது.

இந்த ஆட்சி ஒரு ஜனநாயக ஆட்சி என்ற நிலையில் பாராட்டுக்களைப் பெற்று, சிறப்புக்களை பெற்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில், இதை இழந்தவர்கள், இந்த பொறுப்பை பெற முடியாமல் ஒதுங்கி நின்றவர்கள், விலகி நின்றவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள், மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள், மீண்டும் இந்த ஆட்சியைப் பிடிப்போம் என்று முழங்கிக்கொண்டு, "ஆட்சியைப்பிடிப்போம்'' என்றால், ஏதோ தவறுதலாக, கொள்கைக்கு மாறாக-அண்ணா உருவாக்கிய லட்சியங்களுக்கு எதிராக ஒரு ஆட்சி நடைபெறுவதைப் போலவும், அதை மாற்றி மீண்டும் அண்ணாவினுடைய லட்சியங்களை, அவருடைய கருத்துக்களை கொண்ட ஒரு ஆட்சியை அமைக்கப் போவதாகவும் இன்றைக்கு ஒரு நாடகத்தை, ஒரு கூத்தினை நாட்டிலே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்றுவரையிலே கூட, இந்த ஆட்சியை நாம் நீடித்து நடத்த இருக்கிறோமா-அதற்கு மக்களுடைய ஆதரவு தொடருகிறதா என்ற வகையிலே-சட்டப்பேரவையில் விவாதமே நடந்து முடிந்திருக்கிறது. கடந்த 7, 8 நாட்களாக நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்கின்ற வகையில், நம்முடைய நிதியமைச்சர் அவர்கள் பல வாதங்களுக்கு பதில் கூறி நேற்று நிறைவுரை ஆற்றினார்கள். அதற்கு முன்பு இறுதியாக பேசிய இன்றைய எதிர்க்கட்சியினுடைய துணைத்தலைவர் நண்பர் பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது, "நீங்கள் எல்லாம் வீட்டிற்குப்போகிற காலம் வந்துவிட்டது, நாங்கள் அந்த இடத்திலே வந்து அமரப்போகிற நேரம் வந்து விட்டது, எங்கள் அம்மா முதலமைச்சராக வந்து அமருவார்''என்றெல்லாம் சொல்லி, தன்னுடைய கருத்தை வலியுறுத்திப் பேசினார்.

பேராசிரியர் பதில் சொல்லும்போது சொன்னார்,"மிக வேகமாக, மிக ஆணித்தரமாக பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய கருத்துக்களையெல்லாம் இங்கே எடுத்துச்சொல்லி, நாங்கள்தான் ஆட்சியிலே வந்து அமரப்போகிறோம் என்று நாற்காலிகளையெல்லாம் காட்டிப்பேசினார். ஆனால், அவருக்கு நான் சொல்வேன். அவருடைய எண்ணம் ஈடேறாது என்பதை நான் எப்படி விளக்குகிறேன் என்றால்..'' என்று கூறிவிட்டு- பேராசிரியர் அவர்கள் அவருக்கே உரிய நகைச்சுவையோடு அல்ல, பொறுப்புணர்ச்சியோடு சொன்னார். "நீங்கள் யார் வேண்டுமானாலும் அமரலாம், அம்மா வந்து முதலமைச்சராக உட்காருவார் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் சொன்னார், ஆனால், அம்மா இப்பொழுது ஓய்விலே இருப்பதாக நமக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்'' என்று சொன்னார். அவ்வளவுதான். "அம்மா ஓய்விலே இருக்கிறார்'' என்று சொன்னார்.

இதைச்சொன்னால் என்ன தப்பு? வந்ததே பார் பன்னீர்செல்வத்திற்கு ஆத்திரம்! அவருக்கு பக்கத்திலே இருந்தவருக்கு வந்தது அதைவிட அதிகமாக ஆத்திரம்! இவர் எரிமலையாக பொங்கினார் என்றால், அவர்கள் எல்லாம் பூகம்பமாக வெடித்து,"எப்படிச் சொல்லலாம் ஓய்விலே இருக்கிறார்?'' என்று கேட்டனர்.

உடனே நான் எழுந்துகூட அல்ல; அமர்ந்தபடியே சொன்னேன். ஒரு கடிதத்தைக்காட்டி, "நேற்றைக்கு நீங்கள் சட்டமன்றத்திலே அளித்து, ஒரு தீர்மானம் என்ற பெயரிலே அதை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டீர்களே? அதிலே இருக்கிறது. உங்கள் அம்மா உடல் நலமில்லாமல், ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார், அவருக்கு பரிபூரண ஓய்வு தேவை என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்'' என்று எழுதப்பட்ட கடிதத்தை படித்துக்காட்ட சொன்னேன்.

அதைக்கடிதம் என்றுகூடச் சொல்லமுடியாது. பேராசிரியர் குறிப்பிடுவதைப்போல, அந்த அவையிலே நிறைவேற்ற வேண்டுமென்று பன்னீர்செல்வம் கொடுத்த தீர்மானம் அது. "உடல்நலம் சரியில்லை-பரிபூரண ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும்'' என்ற அந்த தீர்மானம். "ஓய்வு'' என்றால் உங்களுக்கு தெரியும். அது என்ன "பரிபூரண ஓய்வு?'' நான் அந்த விளக்கத்திற்கு செல்ல விரும்பவில்லை.

பரிபூரண ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்றும், அதற்கு இந்த அவையினுடைய ஒப்புதலை அதற்கு பெற்றுத்தர வேண்டும் என்றும் அவரே சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதி, இன்றைக்கு வர முடியவில்லை என்று சொல்லியிருக்கலாம். அதை ஏன் தீர்மானமாக அவையிலே நிறைவேற்ற வேண்டும் என்று பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார். அதை தீர்மானமாக நிறைவேற்றுங்கள் என்று சபாநாயகரிடம் சொன்னேன். அதன்படி, அன்றைக்கு அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு, அந்த அம்மையார் அவைக்கு வரவில்லை. எவ்வளவு புத்திசாலித்தனமாக- எவ்வளவு அறிவுக்கூர்மையோடு, எவ்வளவு தந்திரத்தோடு அந்த கடிதம் கொடுக்கப்பட்டது என்பது பிறகுதான் எங்களுக்கு புரிந்தது.

பெங்களூரில் அந்த அம்மையார் மீது ஒரு வழக்கு நடைபெறுவது உங்களுக்கு தெரியும். வருமானத்திற்கு மீறி, அளவுக்கு மீறி சொத்து சேர்த்திருக்கிறார். கிட்டத்தட்ட 70, 80 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருக்கிறார் என்று ஒரு வழக்கு நடைபெறுகிறது. அந்த வழக்கைப்போட்டு 15 வருடத்திற்கும் மேலாகிறது. 15 வருடங்களாக வாய்தா வாங்கி, வாய்தா வாங்கி, வாய்தாவிற்கும் கால் வலித்து, அலுத்துப் போய், கடைசியாக பெங்களூர் நீதிமன்றத்தில்- ஏன் பெங்களூருவில் அந்த வழக்கு நடைபெறுகிறது என்றால், தமிழ்நாட்டில் அந்த வழக்கு போடும்போது தி.மு.க. ஆட்சியில் இருந்ததால், ஒரு வேளை நீதிபதிகளை எல்லாம் நாங்கள் பயமுறுத்தி, அந்த அம்மையாருக்கு எதிராக தீர்ப்பு வந்து விடுமோ என்று பயந்து, வேறு மாநிலத்தவரால் இந்த வழக்கு நடைபெற வேண்டுமென்று அவர்களே வலியுறுத்தி, அதன்படி பெங்களூரூவிற்கு மாற்றப்பட்ட வழக்கு- இந்த சொத்து சேர்த்த ஊழல் வழக்கு.

அந்த வழக்கில் குறைந்தது 50 வாய்தா வாங்கியாகி விட்டது. இப்போது தேர்தல் வரவிருக்கிறது. தேர்தல் பிரசாரம் ஆரம்பமாக வேண்டிய கட்டம் வந்துவிட்டது. இந்த நேரத்திலே அந்த வழக்கு நடைபெற்றால், வழக்கிலே தீர்ப்பு வந்தால், இந்த அம்மையார் தேர்தலிலே நிற்க முடியுமா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அந்த வழக்கிலே என்ன தீர்ப்பு? எப்படிப்பட்ட தீர்ப்பு? என்பதையெல்லாம் நான் சொல்லமாட்டேன்-சொல்லக்கூடாது.

நீதிமன்றத்திலே ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அது நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்ததே தவிர, என்னுடைய கருத்தை பொறுத்தது அல்ல. ஆகவே, நான் அதைப்பற்றியெல்லாம் விவரமாக சொல்ல விரும்பவில்லை. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. அவர்கள் கடைசியாக வாய்தாவெல்லாம் வாங்க முடியாது. இப்போது நீதிமன்றத்தில் கேள்வி கேட்கிற கட்டம் எல்லாம் வந்துவிட்டது, நீதிமன்றத்தில் கேள்வி கேட்கிறபோது, "குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு வரவேண்டும்'' என்று கண்டிப்பாக நீதிபதி சொல்லிவிட்டார்.

உடனே "இல்லை, இல்லை, எனக்கு உடம்பு சரியில்லை, வரமுடியாது'' என்று சொல்ல, அதற்கு ஆதாரமாக எங்களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். நாம் எப்படியெல்லாம் பயன்பட வேண்டியிருக்கிறது பாருங்கள். எங்களை பயன்படுத்தி, அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, நாங்கள் வாக்களித்து, "சரி, பாவம்-சில நாட்கள்தானே? ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும்'' என்று சொல்லப்போக, அந்த செய்தியை பெங்களூர் நீதிமன்றத்திலே சொல்லி, "பாருங்கள், பாருங்கள்-தமிழக சட்டப்பேரவையிலே கூட, எனக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்'' என்று எடுத்துக் காட்டி, நீதிபதியை நம்ப வைக்க முயற்சித்து, நீதிமன்றத்தில் தப்பித்து இருக்கிறார்கள்.

நேற்றைக்கு ஆஜராக வேண்டிய அந்த நிகழ்ச்சி மாற்றி வைக்கப்படக்கூடும், அது வேறு. ஆக, "எதற்கும் பயப்பட மாட்டேன். நீதிக்கு முன்னால் நீதியை நிலைநாட்டி நிற்பேன்'' என்றெல்லாம் சொல்கின்றவர்கள், இன்றைக்கு நீதியை வளைப்பதற்கு என்னென்ன தந்திரங்கள் உண்டோ, அவைகளையெல்லாம் செய்து பார்க்கிறார்கள் என்பதற்காகத்தான் இதைச்சொன்னேனே அல்லாமல், வேறல்ல.

ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் சொன்னதால், ஜெயலலிதா ஓய்வெடுப்பதாகக் கூறுகின்றனர். அந்த ஓய்வு, நிரந்தர ஓய்வாகத்தான் அவருக்கு இருக்கப்போகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்திலே நீங்களெல்லாம் இன்றைக்கு இணைந்திருக்கிற இந்த நல்ல நாளில், நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்வது, திராவிட முன்னேற்றக்கழகம் "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு'' என்று அண்ணா அவர்கள் சொன்ன அந்த தாரக மந்திரத்தைத்தான் அடிப்படையாக வைத்து நடைபெற்று கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம்-இனமான இயக்கம்-இன உணர்வு இயக்கம்-"திராவிட'' என்கின்ற அந்த உணர்வை வளர்க்கின்ற இயக்கம்-தமிழ் மொழியை காப்பாற்றுகின்ற இயக்கம்.

இந்த அடிப்படை லட்சியங்களை, உணர்வுகளை மறந்துவிடாமல், என்றென்றைக்கும் இந்த கழகம் எடுக்கின்ற தன்மான இயக்கத்தினுடைய முடிவுகளுக்கு-தமிழை வாழ வைக்கின்ற போராட்டங்களுக்கு அனைவரும் கலந்து கொள்கின்ற அளவில் தயாராக இருக்க வேண்டுமென்று உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

விழாவில் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பேசுகையில், இந்த நாட்டுக்கு மட்டும் அல்ல; இந்தியாவுக்கும் எங்கள் தளபதிதான் தேவை. முதல்வராக வருவதற்கு நடிகர்களுக்கு எல்லாம் ஆசை இருக்கிறது. ஆனால் மக்கள் விரும்பவில்லை. மக்கள் எல்லாம் விரும்பும் தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். பல லட்ச மக்களை பெற்றிருக்கிற எங்கள் தளபதி முதல்வராக வரவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது.

நான் தாய் கழகத்தில் இணைவதாக கூறுகிறார்கள். இது எனக்கு தாய்கழகம் இல்லை. இது எனக்கு தந்தை கழகம். நாங்கள் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதற்கு முக்கியமான காரணம், பலவேறு சொந்தங்களை சொல்லி பாரதீய ஜனதா கட்சி மிரட்டிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. தஞ்சையிலும், அறந்தாங்கியிலும் இதுபோன்ற பெரிய கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கும் முதல்வர் கருணாநிதி தேதி தரவேண்டும் என்றார்.

விழாவில் பாஜக சேர்ந்த மாநில முன்னாள் தலைவர் கிருபாநிதி, மாநில முன்னாள் துணை தலைவர் வழக்கறிஞர் வைத்தியலிங்கம், மாநில கலை இலக்கிய அணி பார்வையாளர் சரஸ்வதி ராமநாதன், மாநில இலக்கிய அணி முன்னாள் செயலாளர் சந்திரசேகர், காஞ்சீபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், வரதராஜசுவாமி பட்டுக்கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அன்பழகன் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தி.மு.கவில் இணைந்தனர்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கவிஞர் காசி முத்துமாணிக்கம் மற்றும் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

திமுக கூட்டணி வலுவாக உள்ளது-கருணாநிதி:

பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர், திமுக கூட்டணி வலுவாக உள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழலுக்கும், கலைஞர் டிவிக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திக்கு இன்று கலைஞர் டிவி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகும் இது தொடர்பாக கேள்வி எழுப்புவது விஷமத்தனமானது.

2ஜி அலைக்கற்றை வழக்கில் என்னையும், எனது குடும்பத்தினரையும் சேர்க்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார். என்ன செய்வது, எனக்கு குடும்பம் இருக்கிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+