பிரிட்டிஷ் பெட்ரோலியம்-ரிலையன்ஸ் ரூ.90000 கோடி ஒப்பந்தம்!
டெல்லி: கிருஷ்ணா-கோதாவரி, காவிரி ஆற்றுப் படுகைகள் உள்ளிட்ட 23 இடங்களில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுவை தோண்டி எடுத்து விற்பனை செய்ய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனமும் ரூ. 90,000 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.
ரிலையன்ஸ் வசம் உள்ள 23 பிளாக்குகள் சுமார் 270,000 சதுர கி.மீ பரப்பளவில் பரவிக் கிடக்கின்றன. இந்த பிளாக்குகளில் இயற்கை எரிவாயு, பெட்ரோலியத்தை இரு நிறுவனங்களும் தோண்டி எடுக்கவுள்ளன.
இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 30 சதவீத பங்குகளை பிரிட்டிஷ் பெட்ரோலியம் சுமார் 37,000 கோடிக்கு வாக்கவுள்ளது. மேலும் எரிவாயு-பெட்ரோலியத்தை தோண்டி எடுக்கும் பணிகளுக்காக ரிலையன்சுக்கு மேலும் ரூ. 7,000 கோடியை பிரிட்டிஷ் பெட்ரோலியம் வழங்கும்.
இதையடுத்து இரு நிறுவனங்களும் இணைந்து தலா 50 சதவீத முதலீட்டுடன் ஒரு நிறுவனத்தைத் துவக்கி உற்பத்தியாகும் எரிவாயு, பெட்ரோலியத்தை விற்பனை செய்யவுள்ளன.
மொத்தத்தில் பிரிட்டிஷ் பெட்ரோலியம் இந்தத் திட்டத்தில் ரூ. 90,000 கோடியளவுக்கு முதலீடு செய்யவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் லண்டனில் இன்று கையெழுத்தானது.
ரிலையன் சார்பில் முகேஷ் அம்பானியும், பிரிட்டிஷ் பெட்ரோலியம் சார்பில் அதன் தலைமை செயல் அதிகாரி பாப் டட்லியும் இதில் கையெழுதிட்டுள்ளதாக டெல்லியில் இந்த இரு நிறுவனங்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
