திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்: ராமதாஸ்

ராமதாசின் பேரன் ப.சுகந்தன்- டீனா திருமணம் இன்று எம்.ஆர்.சி. நகர் மேயர் ராமநாதன் செட்டியார் திருமண அரங்கில் நடைபெற்றது. திருமணத்துக்கு வந்திருந்தவர்களை வாழ்த்தி ராமதாஸ் பேசுகையில்,
தமிழக முதல்வர் கருணாநிதி எதையும் நேரம் தவறாமல் செய்பவர். நேரம் தவறாமையை நான் அவரிடம் தான் கற்றுக் கொண்டேன். அதைத் தான் இப்போதும் கடைப்பிடித்து வருகிறேன். அவரிடம் நான் திருமண அழைப்பிதழைக் கொடுத்தபோது எத்தனை மணிக்கு வர வேண்டும் என்று கேட்டார். 9.30 மணிக்கு வாருங்கள் என்றேன். அதன்படி வந்து விட்டார். அவர் முதல்வராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் எந்த காரியத்தைச் செய்தாலும் அவரைத் தான் நினைத்துக் கொள்வேன்.
பத்திரிகை தொடங்கினாலும், தொலைக்காட்சி ஆரம்பித்தாலும், பன்னிசை மன்றம் ஆரம்பித்தாலும் அல்லது கல்வி அறக்கட்டளை ஆரம்பித்தாலும் அவர் மூலமாகத் தான் செய்வேன். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாங்கள் செயல்பட்டபோதும் எங்களுக்கு இடையே நட்பு பாலம் இருந்து கொண்டே இருந்தது.
நான் திருமண அழைப்பிதழை மகிழ்ச்சியோடு கொடுக்கச் சென்று விட்டு மகிழ்ச்சியோடு திரும்பினேன். 31 சீட்களை ராமதாஸ் அள்ளிக் கொண்டு வந்து விடடார் என்று சிலர் வருத்தப்பட்டார்கள். ஆனால் பாமகவுக்கு அதில் மகிழச்சி. யார் எப்படி சதி வலை பின்னினாலும் 6வது முறையாக கருணாநிதி முதல்வராவார். இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உறு துணையாக நிற்கும்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஆட்சிக்கு உறுதுணையாக நின்றோம். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்பட்டோம். ஆனாலும் அளித்த வாக்குறுதியை காப்பாற்றினோம். நான் எனது கட்சிக்காரர்களுக்கு அடிக்கடி சொல்வேன். குடும்பத்தை முதலில் கவனியுங்கள். குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருங்கள் என்பேன். தினமும் ஒரு மணி நேரம் கட்சிக்காக உழைத்தால் போதும் என்று கூறுவேன். முதல்வர் கலைஞர் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கிறார். அது சலருக்கு பொறுக்கவில்லை. அதற்கு என்ன செய்வது என்றார்.
முன்னதாக நிருபர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணிக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருகிறோம். இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அதில் பங்கு கேட்கமாட்டோம். அதே நேரத்தில் தாங்கள் கூட்டணியில் இருந்தபோதும், ஆட்சியாளர்கள் செய்யும் தவறான நடவடிக்கைகளை சுட்டிக்காட்ட தயங்க மாட்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications