அமாவாசை ஸ்பெஷல்: அ.தி.மு.க கூட்டணியில் விஜயகாந்த் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha with Vijayakanth
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கையெழுத்திட்டனர்.

கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழக சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தல்களிலும் தே.மு.தி.க. தனித்தே போட்டியிட்டு தோற்றது. ஆனால் 8 சதவீத வாக்களாளர்களைப் பெற்றிருந்தது.

கூட்டணி பேரத்தில் ஈடுபடாமல், கடவுளோடும் மக்களோடும் கூட்டணி வைத்து போட்டியிடும் தனித்தன்மையுள்ள கட்சி தேமுதிக என்று விஜயகாந்த் தொடர் பிரச்சாரம் செய்து, இந்த வாக்காளர்களைத் திரட்டியிருந்தார்.

மேலும் தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று தொண்டர்கள் கூறுவதை சந்தோஷமாக அனுமதித்தார். எம்ஜிஆர் படத்தை கட்சியின் போஸ்டர்கள் - லெட்டர்பேடிலெல்லாம் பயன்படுத்தினார். இதனால் ஜெயலலிதாவின் அதிமுக மீது அதிருப்தியிலிருந்து எம்ஜிஆர் விசுவாசிகளின் வாக்குகளையும் கவர்ந்தார்.

இந்த நிலையில் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்ற பேச்சு கிளம்பியது. தேமுதிக நிர்வாகிகளும் அதிமுகவினருடன் இரண்டு சுற்றுப் பேச்சு நடத்தினர்.

ஆனாலும் ஜெயலலிதாவோ, விஜயகாந்தோ இதுகுறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. எனவே கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்தது.

வாந்தார் போயஸ் கார்டனுக்கு...

இந்த நிலையில் நேற்று அமாவாசை என்பதால் அன்றே தொகுதி்ப் பங்கீட்டை முடித்துக் கொள்வது என அதிமுக முடிவு செய்து விஜய்காந்துக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் விஜய்காந்த் இரவு வரை இழுத்தடித்தார். இதைத் தொடர்ந்து அதிமுக தரப்பு இறங்கி வர, இரவு 9.30 மணிக்கு விஜயகாந்த் போயஸ் கார்டனில் உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு காரில் சென்றார். அவருடன் தே.மு.தி.க. அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், விஜய்காந்தின் மச்சானும் இளைஞர் அணிச் செயலாளருமான சுதீசும் சென்றார்.

ஜெயலலிதாவுக்கு மரியாதை:

அவர்களுடைய கார் ராதாகிருஷ்ணன் சாலையில் வருவதை அறிந்ததும் ஜெயலலிதா வீட்டின் பிரதான கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. விஜயகாந்தின் கார் அங்கு வந்து சேர்ந்ததும், அவரை வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.

அங்கு ஜெயலலிதாவை விஜயகாந்த் சந்தித்து வணக்கம் தெரிவித்து, தன்னுடன் வந்த நிர்வாகிகளை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

பின்னர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் ஜெயலலிதாவுடன் முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

20 நிமிடம் நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில், தேர்தல் உடன்பாடு கையெழுத்தானது.

41 தொகுதிகளில் தேமுதிக....

அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்குவது என்றும் உடன்பாடு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், "13.4.2011 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே இன்று (4ம் தேதி) ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது..." என கூறப்பட்டிருந்தது.

ஒப்பந்தத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒன்றும் சொல்லாமல் போனார்...

பேச்சுவார்த்தை முடிந்து விஜயகாந்த் வெளியே வந்தார். அங்கு செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான நிருபர்களும், புகைப்படக்காரர்களும் கூடி இருந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை குறித்து விஜயகாந்திடம் கருத்து கேட்க முயன்றனர்.

ஆனால் அவர் எதுவும் கூறவில்லை. வேகவேகமாக காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

மதிமுக என்னாச்சு?:

அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகளும், புதிய தமிழகத்துக்கு 2 தொகுதிகளும், இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுகவின் நீண்ட நாள் 'பார்ட்னரான' ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, அகில இந்திய சமத்தவ மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து ஒரு வார காலத்திற்கு மேல் ஆகிறது. இதில் ஒரு சில கட்சிகளுடன் நேரடியாகவும், சில கட்சிகளுடன் ரகசியமாகவும் பேச்சு வார்த்தைகள் நடந்து முடிந்து விட்டது.

இதுவரை அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்து பெரிய கட்சி என்ற அந்தஸ்து வைகோவின் மதிமுகவுக்கு இருந்தது. இப்போது விஜயகாந்த் கட்சி 41 தொகுதிகளைப் பெற்று அந்த அந்தஸ்தை தட்டிப் பறித்துவிட்டது. மதிமுகவுக்கு இப்போது 18 முதல் 21 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்கிறார்கள். அதிகபட்சம் 23 தொகுதிகளை மதிமுக பெறக்கூடிய சூழல் உள்ளது.

தே.மு.தி.க.வுடன் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இன்றோ நாளையோ உடன்பாடு காணக்கூடும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+