தமிழக தேர்தல் முடிவும் அரசியல் பூகம்பமும்-இந்திய. கம்யூ
திருவாரூர் & திருச்சி: தேசிய அரசியலில் ஏற்படப் போகும் அரசியல் பூகம்பத்துக்கு தமிழக சட்டசபை தேர்தல் முடிவு ஒரு தொடக்கமாக அமையும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறினார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட காங்கிரசும், திமுகவும் தமிழகத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். சேர்ந்து போட்டியிடுவதால் வெற்றி பெற வேண்டும் என துடிக்கிறார்கள். அதனால் பணம் விளையாடுகிறது. அவர்கள் தரும் பணத்தை வாக்காளர்கள் வாங்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தெரியாமல் பணம் உங்கள் வீட்டுக்கு வந்தால் அந்த பணத்தை தர்மகாரியத்துக்கு பயன்படுத்திவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.ஜெயலலிதா முதல் அமைச்சர் ஆவார். தமிழக சட்டசபை தேர்தல் முடிவு மத்தியில் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தும். அந்த பூகம்பம் தமிழகத்தில் மையம் கொண்டதாக இருக்கும். எனவே தேசிய அரசியலில் ஏற்படும் மாற்றத்திற்கு தமிழக சட்டசபை தேர்தல் முடிவு ஒரு தொடக்கமாக அமையும் என்றார்.
கலைஞர் டிவிக்கு பணம் எங்கிருந்து வந்தது?-பாண்டியன்:
இந் நிலையில் திருவாரூர் தொகுதியில் முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குடவாசல் எம். ராஜேந்திரனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறுகையில்,
நாட்டில் தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும் தமிழகத்தில் குடும்ப ஆட்சியை வீழ்த்த நடைபெறும் தேர்தல்தான் மிக முக்கியமானது. தமிழர்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக 26.1.2008ல் சன் டிவிதான் ஒளிபரப்பியது. அப்போது ஏன் இதற்கு திமுக மறுப்பு தெரிவிக்கவில்லை. தவறு செய்த ஆ. ராசாவையும், ஒளிபரப்பிய கலாநிதி மாறனையும் திமுக தலைமை கேள்வி கேட்கவில்லை.
அலைக்கற்றை உரிமம் பெற்ற பல்வாவின் நிறுவனம் மூலம் ரூ. 214 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு பெறப்பட்டுள்ளது. இதை வட்டியுடன் திரும்பச் செலுத்திவிட்டோம் எனத் தற்போது கூறுகின்றனர். கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ஆகியோர் ரூ. 11 கோடியைக் கொண்டுதான் கலைஞர் தொலைக்காட்சியைத் தொடங்கியுள்ளனர்.
2010ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் ரூ. 10 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் எப்படி ரூ. 214 கோடியை வட்டியுடன் திரும்பச் செலுத்தியுள்ளனர். இந்தத் தொகை எங்கிருந்து வந்தது?.
நான் இங்கு வரும்போதுகூட 16 இடங்களில் எனது காரை நிறுத்திச் சோதனை செய்தனர். சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. ஏன் திமுகவினர் மட்டும் பதற வேண்டும்?. அதிமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு முந்தைய ஆட்சி குறித்து கேட்கப்பட வேண்டிய கேள்விகள் கேட்கப்படும், தீர்க்கப்பட வேண்டிய வழக்குகள் தீர்க்கப்படும்.
திமுக ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தில் ரூ. 2,230 கோடி அளவுக்கு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வீடுகள்தோறும் வழங்கிவிட்டு,கேபிள் இணைப்பு மூலம் மாதந்தோறும் ரூ. 400 கோடியை கருணாநிதியின் குடும்பம் சம்பாதிக்கிறது. திமுக ஆட்சி அமைந்தவுடன் கேபிள் டிவி அரசுடைமையாக்கப்படும்.
30 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட திமுகவின் கொள்கைகளை விளக்க தற்போது குஷ்பு, வடிவேலு போன்றோர் தேவைப்படுகின்றனர்.
தேர்தலுக்கு பின்னர் அதிமுக அரசு அமைய கூட்டணிக் கட்சியினர் நிபந்தனையற்ற ஆதரவளிப்போம் என்றார்.
திமுக சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்துவிட்டது-ராஜா:
இந் நிலையில் திருவாரூரில் நிருபர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, முகலாய சாம்ராஜ்யத்தில் கடைசி மன்னராக இருந்த ஒளரங்சீப் போல திமுக தலைவர் கருணாநிதி இருக்கிறார். இந்த சாம்ராஜ்யமும் முடிவுக்கு வந்துவிட்டது.
2ஜி ஸ்பெக்ட்ரம் மிகப்பெரிய கொள்ளை. இதில் திமுகவினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் அரசும் உடந்தையாக இருந்துள்ளது. அதனால் தான், மாநில உரிமைகள் குறித்து முன்பு பேசியது போல், திமுகவால் தற்போது பேசமுடியவில்லை. அதனால் தான், இலங்கை தமிழர்களுக்கு அரசியல் உரிமை, தமிழ் உரிமை, பாதுகாப்பு உரிமை, மீனவர்களுக்கான உரிமை போன்றவை பெற்றுத் தரவில்லை.
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுக, அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது. தேர்தலுக்குப் பின், அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமைய உள்ளது. தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications