வாக்கு எண்ணும் மையங்களை பொதுமக்களும் பார்வையிடலாம்: சகாயம் அறிவிப்பு
மதுரை: வாக்கு எண்ணும் மையங்களை பொதுமக்களும் பார்வையிடலாம் என்று மதுரை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சகாயம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மத்தி, மேற்கு ஆகிய 7 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெற உள்ளது.
திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு பாலிடெக்னிக்கிலும், உசிலம்பட்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியிலும் நடைபெறுகிறது.
இந்த மையங்களை நேற்று தேர்தல் அலுவலரும், மதுரை மாவட்ட கலெக்டருமான சகாயம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மத்திய காவல்படை, மாநில சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் போலீசார் ஆகியோர் கொண்ட நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் துணை வட்டாட்சியர் தலைமையில் 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், டி.ஆர்.ஓ. மற்றும் மாவட்ட அதிகாரிகளும் இந்த பகுதிகளுக்கு தினமும் இரண்டு முறை வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
வாக்கு எண்ணும் மையங்கள் வெப் கேமரா மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள பதிவுகள் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் உள்ள கணிணி மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வந்து பார்வையிடலாம்.
தேர்தலை முன்னிட்டு, மதுரை மேற்கு தொகுதியில் நடைபெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இங்கு மறு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications