2 பாடங்களில் 200 மார்க்: செவித்திறன் குறைபாடுடைய மாணவி சாதனை
சென்னை: பிளஸ் டூ தேர்வில் 2 பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சென்னை சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஷாகிதி சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் பள்ளியின் முதல் மாணவியாகவும் வந்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி ஷாகிதி 1000-க்கு 961 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியின் முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்துள்ளார். அதிலும் குறிப்பாக கணக்குப்பதிவியல், வணிகவியல் ஆகிய 2 பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். எல்.கே.ஜி. முதல் பிளஸ் டூ வரை இதே பள்ளியில் படித்த ஷாகிதி 10-ம் வகுப்பில் 400-க்கு 361 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
இது குறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை வசந்தி பிருந்தா கூறியதாவது,
இந்தப் பள்ளி தொடங்கி 84 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எந்த மாணவியும் 2 பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியதில்லை. ஷாகிதி தான் அந்த சாதனையைப் படைத்துள்ளார். செவித்திறன் குறையுடைய மாணவர்களால் இரண்டு மொழிப் பாடங்கள் படிக்க இயலாது. அதனால் அவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் படித்தால் போதும் என்று அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழ் மீடியம் படிப்பவர்கள் ஆங்கிலம் படிக்க மாட்டார்கள். அதேபோன்று இங்கிலீஷ் மீடியம் படிப்பவர்கள் தமிழ் படிக்க மாட்டார்கள்.
எனவே, செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 400 மதிப்பெண்களுக்கும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 1100 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதிய 29 மாணவிகளுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றார்.


Click it and Unblock the Notifications
