18 முதல் சட்டக்கல்வி விண்ணப்ப வினியோகம்: துணைவேந்தர் வி.விஜயகுமார்
சென்னை: தமிழகத்தில் சட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் 18-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.விஜயகுமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழக சட்டக்கல்லூரிகளில் பிளஸ் டூ முடித்துவிட்டு 5 வருட பி.ஏ., பி.எல். படிப்புக்கு ஆயிரத்து 52 இடங்களும், 3 வருட பி.எல். படிப்புக்கு ஆயிரத்து 262 இடங்களும் உள்ளன. சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.எல்.ஆனர்ஸ் படிக்க எற்கனவே இருந்த 40 இடங்களில் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 5 வருட பி.ஏ.பி.எல். ஆனர்ஸ் படிப்பில் இருந்து 80 இடங்கள் 120-க உயர்த்தப்பட்டுள்ளது. எம்.எல். படிப்பில் 8 வகையான பிரிவுகள் உள்ளன. எம்.எல். படிப்பில் 160 இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளுக்களில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 18-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 3 வருட பி.எல். படிப்புக்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் மாதம் 30-ம் தேதி கொடுக்கப்படுகிறது. அன்றே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும்.
5 வருட பி.ஏ.பி.எல்.படிப்புக்கு ஜூன் மாதம் 15-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாளும் ஜூன் 15-ம் தேதி தான்.
பி.ஏ.பி.எல்.ஆனர்ஸ் படிப்புக்கும், பி.எல்.ஆனர்ஸ் படிப்புக்கும் ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. ஜூன் 10-ம் தேதி தான் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாளாகும்.
எம்.எல். படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 17-ம் தேதி வழங்கப்படுகிறது. அன்றே விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
சட்டக்கல்வியில் முது நிலை பட்டயப்படிப்பு படிக்க வரும் 18-ம் தேதி முதல் ஜூலை 30-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 30-ம் தேதி.
பி.ஏ.பி.எல். படிப்புக்கு ஜூன் மாதம் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது. மற்ற படிப்புகளுக்கு அதன் பின்னர் நடைபெறும்.
சட்டக்கல்வி மாணவர்கள் தங்களது தேர்வு கட்டணத்தை இந்தியன் வங்கிக் கிளைகளில் செலுத்தலாம். அதற்கான சிறப்பு செலான் கொடுக்கப்பட உள்ளது. இதனால் டிமாண்ட் டிராப்ட்டுக்கான கமிஷன் கட்டத்தேவையில்லை.
தரமணி ரயில் நிலையம் எதிரே 15 ஏக்கர் நிலத்தில் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு பிரமாண்டமான கட்டிடம் கட்டப்பட உள்ளது. அந்த கட்டிடம் 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டு 2013-14ல் திறக்கப்பட்டு செயல்படும்.
இந்திய சட்ட தகவல் நிறுவனம் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் www.liiofindia.org என்ற இணையதளத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், புதிய சட்டங்கள் உள்பட அனைத்தையும் இலவசமாக பார்க்கலாம். நாங்களும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சட்டம் சார்ந்த தகல்களை அந்த இணையதளத்தில் வெளியிடவிருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications