சோமாலிய கடற் கொள்ளையர்களிடமிருந்து மீண்டு பாக். வழியாக இந்தியா திரும்பிய மாலுமிகள்
டெல்லி: சோமாலிய கடற் கொள்ளையர்களிடமிருந்து மீண்டு, பாகிஸ்தான் கடற்படையினரால் மீட்கப்பட்ட 6 இந்திய மாலுமிகளும் இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எம்.வி.சூயஸ் என்ற கப்பலில் இருந்தவர்கள் இவர்கள். இந்தக் கப்பல் 10 மாதங்களுக்கு முன்பு சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டது. பின்னர் அதில் இருந்த 22 ஊழியர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் பாகிஸ்தானியர்கள், 6 பேர் இந்தியர்கள். சூயஸ் கப்பலை ஓமன் கடற் பகுதிக்கு கொள்ளையர்கள் கொண்டு சென்று விட்டனர்.
இவர்களை மீட்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அன்சார் பர்னி கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். சோமாலிய கடற் கொள்ளையர்களுடன் அவர் தொடர்ந்து பேச்சு நடத்தினார். இதன் விளைவாக கணிசமான பணத்தை வாங்கிக் கொண்ட கொள்ளையர்கள் கப்பலை விட்டு விட்டு கிளம்பிச் சென்றனர்.
இந்தப் பணத்தைக் கொடுப்பதற்காக தனது நாட்டில் பலரிடமும் நன்கொடை வசூலித்து சேகரித்தார் பர்னி என்பது குறிப்பிடத்தக்கது.
கப்பலை விட்டு விட்டு கடற்கொள்ளையர்கள் கிளம்பிச் சென்ற சில மணி நேரத்தில் அது மீண்டும் தாக்குதலுக்குள்ளானது. இதையடுத்து பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ஜுல்பிகர் விரைந்து சென்று சூயஸ் கப்பலை மீட்டது.
பிறகு அதில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு துபாய்க்குக் கொண்டு சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் பிறகு அங்கிருந்து பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றது. பின்னர் அவர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தது.
முன்னதாக இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்தியா முழுமையாக உதவவில்லை, ஈடுபடவில்லை என்று கடும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து இந்திய அரசு தனது ஐஎன்எஸ் கோதாவரி போர்க்கப்பலை அனுப்பி வைத்தது. இருப்பினும் அதற்குள் சூயஸ் கப்பலில் சிக்கித் தவித்த ஊழியர்களை பத்திரமாக கொள்ளையர்களிடமிருந்து பாகிஸ்தான் கப்பல் மீட்டு தனது நாட்டுக்குக் கொண்டு சென்று விட்டது.
இதற்கிடையே, ஓமனிலிருந்து சூயஸ் கப்பலை அழைத்து வந்தபோது அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு மூழ்க ஆரம்பித்தது. இதையடுத்து அதில் இருந்தவர்கள் பாகிஸ்தானின் பிஎன்எஸ் பாபர் கப்பலுக்கு மாற்றப்பட்டனர். பிறகு ஜுல்பிகருக்கு மாற்றப்பட்டு கராச்சி கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அனைவருக்கும் உற்சாக வரவேற்பு தரப்பட்டது. பாகிஸ்தானில், இந்திய மாலுமிகள் நல்ல முறையில் கவனிக்கப்பட்டனர். இவர்களை மீட்க அரும்பாடுபட்ட பர்னியும் அங்கு வந்திருந்தார். அவருக்கு அத்தனை மாலுமிகளும், ஊழியர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
இன்று காலை டெல்லி வந்து சேர்ந்த இந்திய மாலுமிகள் பர்னி அங்கிளுக்கு எங்களது நன்றிகள் என்று உணர்ச்சிவசத்துடன் தெரிவித்தனர்.
பாகிஸ்தானுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா நன்றி
இதற்கிடையே, உரிய சமயத்தில் இந்திய மாலுமிகளை மீட்டதற்காக பாகிஸ்தான் கடற்படைக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications