மும்பை குண்டுவெடிப்பு: ஆஜ்மீர் சிறையில் உள்ள கைதி அன்சாரியிடம் என்ஐஏ விசாரணை!
ஆஜ்மீர்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஆஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஜலீஸ் அன்சாரியிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
டாக்டர் பாம்ப் என்று அறியப்படுபவர் அன்சாரி. காரணம், குண்டுகள் தயாரிப்பதில் இவர் நிபுணத்துவம் உடையவர் என்பதால்.
முன்பு மும்பையில் நடந்த ஒரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைதாகி தற்போது ஆஜ்மீர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் அன்சாரி. இவர் 1994ம் ஆண்டு மும்பையில் வைத்து, மகாராஷ்டிர மற்றும் குஜராத் போலீஸார் இணைந்து நடத்திய வேட்டையின்போது கைது செய்யப்பட்டவர் ஆவார்.
கடந்த ஆண்டு ஆஜ்மீர் மத்திய சிறையில் நடத்திய அதிரடி சோதனையின்போது அன்சாரியிடமிருந்து ஏராளமான சிம் கார்டுகள் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செயய்பப்ட்டது. அந்த போனிலிருந்து பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அவர் போன் செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
நாசிக்கைச் சேர்ந்தவர் அன்சாரி. பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் இவர் 12 பேருடன் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி நாச வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் அன்சாரிக்குத் தொடர்பு இருக்கலாம் என என்ஐஏ சந்தேகிக்கிறது. இதையடுத்தே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
