பெங்களூர் கோர்ட்டில் சசிகலா-விலக்கு கோரிய ஜெ. கோரிக்கை குறித்து ஆக. 1ல் முடிவு

அதேசமயம், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனு மீது ஆகஸ்ட் 1ம் தேதி விசாரணை நடத்தப்படும் என சிறப்பு கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த 15 வருடமாக இந்த வழக்கு பெங்களூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ரூ. 65 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவித்து விட்டதாக கூறி ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சசிகலா, அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் நான்கு பேரும் ஜூலை 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று தனி கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்குமாறும், வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகத் தயார் என்றும் ஜெயலலிதா தரப்பில் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று தனி கோர்ட்டில் சசிகலாவும், இளவரசியும் நேரில் ஆஜரானார்கள்.
இருப்பினும் அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தவில்லை. மாறாக, இருவரும் நேரில் ஆஜரானதை பதிவு செய்து கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டார். மறு முறை அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
இதனால் கிட்டத்தட்ட 2 மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் சசிகலாவும், இளவரசியும் கோர்ட்டிலிருந்து வெளியேறி சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் மனுவை நீதிபதி விசாரித்தார். அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், நேரில் ஆஜராகாமல் எழுத்துப் பூர்வமாக வாக்குமூலம் தர சட்டப்பூர்வமாக இடம் உண்டு என்று வாதிட்டார்.
இதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications