சுதந்திர தினம்: செங்கோட்டையில் 0 மணி 0 நிமிடம் 0 விநாடியில் கொண்டாட்டம்
செங்கோட்டை: செங்கோட்டையில் வீரவாஞ்சி இயக்கம் சார்பில் இன்று நள்ளிரவில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.
நம் நாட்டிற்கு நள்ளிரவில் தான் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது. ஆனால் நாம் சுதந்திர தினத்தை காலையில் 6 அல்லது 8 மணிக்குத் தான் கொண்டாடி வருகிறோம். ஆனால் ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற சுவடுகளை மறக்காமல் ஆங்கிலப் புத்தாண்டை மட்டும் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவில் கொண்டாடி மகிழ்கிறோம். நாடு விடுதலை பெற்ற தினத்தின் நள்ளிரவினை யாரும் கொண்டாடுவதில்லை.
இதனை மாற்றும விதமாக நம் முன்னோர்கள் கண்ணீரும், செந்நீரும் (ரத்தம்) சிந்தி பெற்றுத் தந்த சுதந்திரத்தை சுகமாக அனுபவிக்கும் நாம் அந்த ஆகஸ்ட் 15 என்ற பொன்னாளையும், நம் முன்னோர்களின் தியாகங்களையும் போற்றும் விதமாகவும், சுதந்திரப் போருக்கு அகிம்சை மட்டுமே தீர்வாகாது, ஆயுதமும் ஏந்திட வேண்டும் என்று முதன் முதலில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேய ஆட்சித் தலைவர் ராபர்ட் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தையே அலற வைத்த அஞ்சா நெஞ்சன் மாவீரன் வாஞ்சிநாதன் பிறந்த செங்கோட்டையில் அவரது சிலை முன்பு இந்தியாவின் அடிமை விலங்கு உடைத்தெறியப்பட்ட நாளை 0 மணி 0 நிமிடம் 0 விநாடியில் கொண்டாடப்படுகிறது. நகராட்சி சங்கு ஒலிக்க, வான வேடிக்கைகள் முழங்க வீரவாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
இன்று நள்ளிரவில் செங்கோட்டை மக்கள் திரளாக கலந்து கொள்ள வீரவாஞ்சி இயக்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலகலமாக நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை வாஞ்சி இயக்கத்தின் நிறுவனர் ராமநாதன் தலைமையில் பிரமுகர்கள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications