லிபிய தலைநகர் திரிபோலி வீழ்ந்ததா?: கடாபி எங்கே?

கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைநகர் திரிபோலியை புரட்சிப் படையினர் கைப்பற்றினர். இதையடுத்து கடாபியின் அரண்மனையை முற்றுகையிட்டு அவரது இரண்டு மகன்களை கைது செய்தனர். இன்னொரு மகனும் உளவுப் பிரிவித் தலைவரும் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது புரட்சிப் படையினர் நடத்திய தாக்குதலில் பலியானார்களா என்று தெரியவில்லை.
ஆனால், அந்த அரண்மனையில் கடாபியோ அவரது மனைவியோ இல்லை. தங்களது மகள்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகளுடன் அவர்கள் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது.
அவர்களை தென் ஆப்பிரிக்கா காப்பாற்றி அழைத்துச் சென்றுவிட்டதாக தகவல் பரவியுள்ளது. ஆனால், அதை அந்த நாடு மறுத்துள்ளது. திரிபோலியில் சிக்கியிருந்த தங்களது நாட்டுத் தூதரக அதிகாரிகளை மட்டுமே விமானங்களை அனுப்பி மீட்டு அழைத்துச் சென்றதாகவும் கடாபியை அழைத்துச் செல்லவில்லை என்றும் தென் ஆப்பிரிக்கா கூறியுள்ளது.
இதற்கிடையே கடாபி வெனிசுவேலாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் தகவல்கள் பரவியுள்ளன. ஆனால், லிபியாவில் தான் எங்கேயே பதுங்கியிருப்பதாக புரட்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்தார் கடாபி. கடந்த 6 மாதமாக அமெரிக்கா தலைமையிலான நேடோ படையினரின் மறைமுக உதவியோடு கடாபிக்கு எதிராக புரட்சிப் படையினர் லிபியா முழுவதும் தாக்குதல்கள் நடத்தி ஆட்சியைக் கவிழ்க்க முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
திரிபோலிக்குள் புரட்சிப் படையினர் நுழைந்தபோது, கடாபியை பாதுகாக்க வேண்டிய சிறப்பு கமாண்டோ படையினர் அவர்களிடம் சண்டை ஏதும் போடாமல் அமைதியாக சரணடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
புரட்சிப் படையினருக்கு ஆதராவாக நேடோ போர் விமானங்கள் அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி ராணுவத்தினரை நிலை குலைய வைத்தனர்.
ஆனால், புரட்சிப் படைகளை தலைநகருக்குள் நுழைய விட்டு அவர்களை முறியடித்துவிட்டதாக கடாபியின் மகன் சைப் அல் சலாம் கூறியுள்ளார். ராணுவத்தினர் தான் திட்டமிட்டு, புரட்சியாளர்களை திரிபோலிக்குள் நுழைய விட்டதாகவும், இப்போது அவர்களை ராணுவம் சுற்றி வளைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது தந்தை கடாபியும் குடும்பத்தாரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக இவரை கைது செய்துவிட்டதாக புரட்சியாளர்கள் கூறிய நிலையில், திடீரென ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து அங்கிருந்த சர்வதேச பத்திரிக்கையாளர்களை சந்தித்து கை குலுக்கிவிட்டு மேற்கண்டவாறு பேட்டியளித்துவிட்டுச் சென்றார் சலாம்.
இரு தரப்பிலிருந்தும் மாறுபட்ட தகவல்கள் வந்து கொண்டிருப்பதால் உண்மையான நிலை என்ன என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
