தமிழ் புத்தாண்டு தேதி: 500 தமிழ் புலவர்கள் கூடி எடுத்த முடிவு- கருணாநிதி

தை முதல் நாளுக்குப் பதிலாக சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு தினம் என்று மாற்றி நேற்று அதிமுக அரசு சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இது குறித்து கருணாநிதி அளித்த பேட்டி:
கேள்வி: தை' முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு பதிலாக, சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கும் வகையில் அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளதே?
கருணாநிதி: மறைமலையடிகள் தலைமையில் 1921ம் ஆண்டு 500 புலவர் பெருமக்கள் கூடி, அவர்கள் கலந்துரையாடி, ஆழமாக விவாதித்து, அப்படி ஆய்ந்தறிந்து அறிவிக்கப்பட்ட ஒன்றுதான். திருவள்ளுவர் ஆண்டு என்பதும், ஆண்டு தொடக்கம் தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் நாளில்தான் என்றும் முடிவு செய்தனர்.
அந்த 500 தமிழ்ப் புலவர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவின் அடிப்படையில்தான் திமுக ஆட்சியில், தை முதல் நாளை தமிழாண்டுத் தொடக்க நாள் என்றும், அதையொட்டித்தான் திருவள்ளுவர் ஆண்டு என்றும் வரையறுத்தோம்.
கேள்வி: திமுக அரசின் சட்டத்தை ரத்து செய்து அதிமுக அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்த்திருக்கிறார்களே?
பதில்: அவர்களின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.
தமிழ்ப் புத்தாண்டை மாற்றக்கூடாது-ராமதாஸ்:
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கத்தை மாற்றி மீண்டும் சித்திரை மாதத்தின் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வகை செய்யும் மசோதாவை சட்டமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. இது தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தை மாதம் முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று நானும், தமிழ் அறிஞர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகே கடந்த 2008ம் ஆண்டு தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிப்பதற்கான சட்ட திருத்தம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த வரலாற்றுப் பிழை நீக்கப்பட்டது. இந் நிலையில், தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல.
சித்திரை முதல் நாள் இந்துக்களின் புத்தாண்டு என்ற போதிலும், குஜராத்தியர்களும், மராட்டியர்களும் தங்களது இனத்தின் அடிப்படையில் தனி புத்தாண்டை கொண்டுள்ளனர். அப்படியிருக்கும்போது, அவர்களுக்கெல்லாம் முன்தோன்றிய மூத்த குடியான தமிழ்க்குடி, தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடும் உரிமையை பறிக்கக்கூடாது.
தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்ப் புத்தாண்டை மாற்றுவதற்கான மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
கி.வீரமணி கண்டனம்:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் பேசுகையில், ஏற்கனவே தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டுவரப்பட்ட சட்டம் நடைமுறையில் உள்ளது. மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் ஏற்கப்பட்டு வலியுறுத்தப்பட்டதுதான் தை' மாதம் முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டு தொடக்கம் என்பதாகும்.
அதை மாற்றி மீண்டும் சித்திரை முதல் தேதி தான் தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு என்று அதிமுக அரசு, சட்டம் இயற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.












Click it and Unblock the Notifications