Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்னாவின் நிபந்தனைப்படி நாடாளுமன்றத்தில் லோக்பால் விவாதம் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
டெல்லி: அன்னா ஹசாரேவின் நிபந்தனைப்படி நாடாளுமன்றத்தில் இன்று லோக்பால் மசோதா குறித்த விவாதம் தொடங்கியது. இதையடுத்து அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்த விவாதம் நேற்றே தொடங்க இருந்தது. ஆனால், அங்கு நிலவிய கடும் அமளியால் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சனிக்கிழமை விடுமுறை தினம் என்றாலும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது.

இன்று நாடாளுமன்றம் கூடியதும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்பால் குறித்த அறிக்கையை சமர்பித்து, ஹசாரே தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து பாஜக தலைவர் அத்வானி பேசினார். இந்தப் பிரச்சனையை இன்றே முழுமையாக விவாதித்து மாலைக்குள் ஒரு தீர்வை எட்ட வேண்டும், இதன்மூலம் அன்னாவின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றார்.

நாடாளுமன்றத்தில் அன்னா குழு உருவாக்கிய ஜன் லோக்பால் தவிர எல்லா லோக்பால் மசோதாக்கள் குறித்தும் விவாதம் நடத்தப்படவுள்ளது.

அத்வானியைத் தொடர்ந்து பேசிய பாஜக மக்களவைத் தலைவர் சுஷ்மா சுவராஜ், லோக்பால் மசோதா 43 ஆண்டுகளாக நடைமுறைக்கு வராமல் இருப்பது கவலை தருகிறது. எங்கள் ஆட்சியிலும் இந்த ம‌சோதாவை கொண்டு வரமுடியாமல் போனது. ஊழல்களைக் கண்டு மக்கள் வெறுத்துப்போய் உள்ளனர். மத்திய அரசு கொண்டு வரும் மசோதா பல் பிடுங்கப்பட்டதாக உள்ளது. அரசு கொண்டு வந்த இந்த மசோதா, ஏற்கெனவே எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் அமைந்துவிட்டது.

பிர‌தமரை லோக்பாலில் இருந்து விலக்கி வைக்கக் கூடாது. சி.பி.ஐ அமைப்பு, நாட்டில் அரசியல் எதிரிகளைப் பழிதீர்த்துக் கொள்ளவே பயன்படுத்தப்படுகிறது. குஜராத் விஷயத்தில் அரசு இரட்டை நிலையைக் கடைப்பிடிக்கிறது. அங்கே லோக் ஆயுக்தா நீதிபதியை நியமிக்கும் விஷயத்தில், ஆளுநர் மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சை முடிவு எடுக்கிறார். ஏன் இந்த நிலைப்பாடு? என்றார் சுஷ்மா.

ராகுல் மீது ஹசாரே கோபம்:

முன்னதாக நேற்று லோக்பால் மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் தெரிவித்த கருத்துக்கள் ஏமாற்றம் தருவதாக அன்னா ஹசாரே தரப்பு கூறியுள்ளது.

ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசுகையில், தனிப்பட்ட நபர்கள் அரசுக்குக் கொடுக்கும் நிர்பந்தம் காரணமாக ஜனநாயக நடைமுறைகள் பலவீனமடைந்துவிடக் கூடாது. அதை நாம் அனுமதிக்கவும் கூடாது. இந்த விஷயத்தில் நாம் விட்டுக் கொடுத்துவிட்டால் அது மிகவும் அபாயகரமான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும்.

என்னதான் நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைத் தவிர்த்துவிட்டோ, நாடாளுமன்ற நடைமுறைகளை பலவீனமடையச் செய்யும் வகையிலோ நடத்தப்படும் போராட்டங்கள் ஜனநாயகத்துக்கு ஏற்றவை அல்ல.

இன்றைக்கு அது ஊழலுக்கு எதிரான இயக்கமாக இருக்கலாம். நாளை அது வேறு மாதிரியான உருவம் எடுக்கலாம். ஊழலை ஒழிக்க லோக்பால் மட்டுமே உதவாது.

ஊழல் எல்லா மட்டத்திலும் உள்ளது. அதை உடனடியாக ஒழிக்க முடியாது. அப்படி ஒழிப்பதற்குத் தேவையான மந்திரக் கோல் நம்மிடம் இல்லை.

ஊழலால் கடுமையாக பாதிக்கப்படுவது ஏழை மக்கள்தான். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அதேசமயம், ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியாது. தொடர்ச்சியான செயல்பாடுகள், வலுவான அரசியல் திட்டங்கள் தேவை. அரசியல் துணிச்சல் தேவை.

அன்னா ஹஸாரே தனது போராட்டத்தின் மூலம் ஊழலுக்கு எதிரான பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இதற்காக அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தற்போதைய பிரச்சனையை தீர்ப்பது என்பது இப்போது பிரச்சனை இல்லை. இது மிகப் பெரிய விவகாரம். இதற்கு நீண்ட காலத் தீர்வைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

வலுவான லோக்பால் என்பது ஊழலுக்கு எதிரான போரில் ஒரு அஸ்திரமாக மட்டுமே இருக்க முடியும். லோக்பாலால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று கூற முடியாது. தொடர்ச்சியான பல்வேறு சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்.

லோக்பால் என்பது தேர்தல் ஆணையம் போல சுயாட்சி படைத்த அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும்.

தேர்தலின்போது கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதிகள் குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டும். அனைவரும் உண்மையாக உழைக்க வேண்டும். ஜனநாயக நடைமுறைகளை பலவீனப்படுத்தும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.

ராகுலின் இந்தக் கருத்துக்கு அன்னா தரப்பு எதி்ர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரசாந்த் பூஷண் கூறுகையில், ஒரு சட்ட மாற்றம், சட்ட வரைவு கொண்டுவர நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் வேண்டும். எனவே, காங்கிரஸ் முதலில் தன் முன் உள்ள லோக்பால் மசோதாவை முதலில் நிறைவேற்றட்டும். பிறகு மற்றதைப் பற்றி யோசிக்கலாம் என்றார்.

கிரண் பேடி கூறுகையில், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முன் உங்கள் முன் இருக்கும் சிறு சிறு மலைகளையும் ஏறிக் கடக்க வேண்டும். லோக்பால் மசோதா என்பது உங்கள் முன் உள்ள மிகப்பெரும் மலை. அதில் ஏறிவிட்டால், அதுவே உங்களை எவரெஸ்ட் சிகரத்துக்கு அழைத்துச் சென்றுவிடும். அதை முதலில் தொடங்க வேண்டும். இது தான் ராகுலுக்கு எனது பதில் என்றார்.

சமூக சேவகி மேதா பட்கர் கூறுகையில், ஹசாரே முன்வைத்த மிகப் பெரிய பிரச்னையைப் பற்றி ராகுல் காந்தி சிந்திக்கவில்லை. ஊழலுக்கு எதிராக லட்சோபலட்சம் மக்கள் கொண்டுள்ள ஒட்டுமொத்த உணர்வை ராகுல் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். அவரது கருத்து லோக்பால் மசோதாவை கிடப்பில் போட வைத்துவிடும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+