தமிழ்நாட்டில் 2016ல் ஆட்சி பீடத்தில் மதிமுக உட்காரும் என்கிறார் வைகோ

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையட்டி நெல்லை பொருட்காட்சி மைதானத்தில் மதிமுக சார்பில் திறந்தவெளி மாநாடு நடந்தது. அதில் நேற்றிரவு 11.40க்கு பேச ஆரம்பித்த வைகோ நள்ளிரவு 2 மணிக்கு தனது உரையை முடித்தார். அவரது பேச்சின் சில பகுதிகள்:
நெல்லை மாநாடு எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு பெரிய கூட்டம் கூடி எனக்கு இவ்வளவு பெரிய திருப்பு முனையாக இருக்கும் நினைக்கவில்லை.
"நான் அண்ணா அல்ல; என்னால் அண்ணா ஆகிவிடவும் முடியாது. என் பின்னால் வருபவர்கள் வியர்வைத் துளிகள், கண்ணீர்த் துளிகள், ரத்தத் துளிகள் சிந்துவதற்கு சித்தமாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் என்னை பின் தொடரலாம்.
இரண்டு பெரிய கழகங்களுக்கும் சொல்லிக்கொள்வேன். எங்கள் அண்ணாவை சொந்தம் கொண்டாட முடியாது.
தமிழகத்தில் அதிகாரத்தை மதிமுக கைப்பற்றியே தீரும். தமிழ்நாட்டில் 2016ல் ஆட்சி பீடத்தில் மதிமுக உட்காரும்.
1994ல் எங்கள் தலையில் பெரிய இடியே விழுந்தது. ஸ்டெர்லைட் என்கிற அந்த ஆலை தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் ஆலையை மூடுவதற்கான முயற்சிகளோடு போராடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கொடுத்த அறிக்கையோ ஆலைக்கு முழுக்க முழுக்க ஆதரவாக உள்ளது. அந்த அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் மூன்று பேரின் மரண தண்டனையை நீக்க வேண்டுமானால் அமைச்சரவை கூடி முடிவெடுக்க வேண்டும். அதுதான் தீர்வாக இருக்கும். அதற்கான கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருக்கிறோம் என்றார்.
முன்னதாக 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்,
-1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை, 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது வரவேற்கத்தக்கது. மூவரின் உயிரை காக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜனாதிபதியை வலியுறுத்தி, சட்டசபையில் முதல்வர் கொண்டு வந்த பாராட்டுக்குரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
எனவே, தமிழக சட்டசபை தீர்மானத்தையே தமிழகத்தின் வேண்டுகோளாக கருதி, அதனை மத்திய அரசுக்கு ஜனாதிபதி அனுப்பி வைக்கவும், அதன் பேரில் பேரறிவாளன் உள்பட 3 பேரின் மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
-மேலும் 137 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது போல், இந்தியாவிலும் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 3 தமிழர்கள் உயிர்காக்கும் பிரச்சினையில் தமிழக முதல்வர் சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டுள்ளார். ஒரு வேளை 3 பேரின் தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு முன்வராவிட்டால், மரண தண்டனையை குறைக்கும் மாநில அரசுகளின் அதிகாரமான 161வது இந்திய அரசியல் சட்டப் பிரிவை பயன்படுத்தி அவர்களை காப்பாற்ற தமிழக முதல்வரை மாநாடு கேட்டுக் கொள்கிறது.
-நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி நிற்க வேண்டிய சூழல், ம.தி.மு.க. இடம் பெற்றிருந்த கூட்டணி தலைமையால் உருவாக்கப்பட்டது. சோதனைகளை சாதனைகளாக ஆக்கிக் கொண்டு, அரசியல் களத்தில் எந்த நேரமும் மக்கள் பணியாற்றி வரும் ம.தி.மு.க., அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மையான, திறமையான, ஊழல் அற்ற நிர்வாகத்தை வழங்கிட, ம.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள், வாய்ப்பு தாருங்கள் என்ற வேண்டுகோளுடன், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர்களுக்கு மக்கள் மகத்தான ஆதரவை வழங்க வேண்டும் என்று மாநாடு கேட்டுக் கொள்கிறது.
-கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் அரசு தற்போது மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன், முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. கேரள அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்து உள்ள அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்துக்கு வாழ்வாதாரமான முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அரசின் அணை பாதுகாப்பு ஆணையம், சமீபத்தில் எடுத்துள்ள முடிவானது, இந்திய ஒருமைப்பாட்டுக்கே உலை வைக்கும் செயல் ஆகும். அதனை மத்திய அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் பின் விளைவுகள் விபரீதமாகும் என்று இம்மாநாடு எச்சரிக்கிறது.
-நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசு அமைத்து உள்ள அணுமின் நிலையம் ஆழிப்பேரலை தாக்கினாலோ, நில அதிர்வு ஏற்பட்டாலோ கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தென் தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மீனவ மக்கள் உள்பட அனைத்து தரப்பினர் இடிந்தகரையில் உண்ணாநிலை அறப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்ட 127 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்து போராடுகிறார்கள். பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத கூடங்குளம் அணுமின் நிலையம், பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அதை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மத்திய அரசு, தமிழர்கள் எப்படி அழிந்தால் என்ன? என்ற மனப் போக்கில், கூடங்குளத்தில் 8 ரியாக்டர்களும், கல்பாக்கத்தில் 8 ரியாக்டர்களும் அமைக்கப் போவதாகவும், இந்த 2 இடங்களும் அணுசக்தி பூங்காக்கள் என்றும் அறிவித்து இருப்பது அதிர்ச்சியை தருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை அகற்றக் கோரும், அறப் போராட்டத்துக்கு இந்த மாநாடு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன், இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
-பரமக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது. மேலும் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்து உள்ள நிவாரணத் தொகையை ரூ.5 லட்சத்துக்கு குறையாமல் உயர்த்த வேண்டும். தென் மாவட்டங்களில் சமூக ஒற்றுமையும், சமூக நல்லிணக்கமும் காக்கப்படுவதற்கு அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்துகிறது.
-தமிழக மீனவர்களின் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்ற இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்பது ஒன்றே சரியான தீர்வாக அமையும். இதை சுட்டிக்காட்டுவதுடன் கச்சத்தீவை மீட்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
-தமிழ் சமுதாயத்தை அவலத்தில் இருந்து காப்பாற்ற, மது அரக்கனை ஒழிக்க வேண்டும்.
- அரசு கேபிள் தொடங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கேபிள் தொழிலை நம்பி வாழ்கிறவர்களும், அனைத்து மக்களும் பயனடையும் வகையில், கட்டண சேனல்கள் உள்பட அனைத்து சேனல்களும் அதில் காட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications