திருச்சி மேற்கு இடைத் தேர்தல்- அக். 10ம் தேதி கருணாநிதி பிரசாரம்
சென்னை: திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு அக்டோபர் 10ம் தேதி திமுக கருணாநிதி பேசவுள்ளார். இதையடுத்து திருச்சி மேற்குத் தொகுதி திமுகவினர் உற்சாகத்துடன் தீவிரக் களமிறங்கியுள்ளனர்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத் தேர்தல் திமுகவுக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. வேட்பாளர் கே.என். நேருவைப் பொறுத்தவரை இது அவருக்கு வாழ்வா, சாவா போராட்டம் போல மாறியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி திமுகவில் ராஜா போல விளங்கி வரும் அவரது செல்வாக்கை நிரூபிக்க இந்த தேர்தல் அவருக்கு உதவும்.
இத்தேர்தலில் அவர் லேசான ஓட்டு வித்தியாசத்தில் வென்றாலும் சரி, அல்லது லேசான ஓட்டு வித்தியாசத்தில் தோற்றாலும் சரி அவரது செல்வாக்கு சரியவில்லை என்பது நிரூபணமாகும். மேலும் அவர் மீது அதிமுக அரசு தொடர்ந்துள்ள நில அபகரிப்பு வழக்குகளை மக்கள் ஏற்கவில்லை என்பதும் நிரூபணமாகி விடும். கடந்த தேர்தலில் வெறும் 7000 வாக்கு வித்தியாசத்தில்தான் அதிமுக வேட்பாளரிடம் நேரு தோற்றார் என்பது நினைவிருக்கலாம்.
அதேசமயம், பெரும் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வென்று விட்டால், அது நேரு மீதான வழக்குகள் சரியே என்று திருச்சி மக்கள் தீர்ப்பளித்துள்ளதாக கருதப்படும்.
மறுபக்கத்தில் நேரு வென்றாலோ அல்லது பெரும் தோல்வியைத் தவிர்த்து மயிரிழையில் தோற்றாலோ அது அடுத்து வருகிற லோக்சபா தேர்தல் வரை திமுகவை தாக்குப் பிடிக்க வைத்து விட உதவும் என அக்கட்சி கருதுகிறது. மொத்தத்தில் இந்தத் தேர்தல் பல வகையிலும் திமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
திருச்சி மேற்குத் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி அக்டோபர் 10ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பேசுகிறார்.
அதேபோல திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை திருச்சியில் முகாமிட்டு தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications