ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் நகை, பணம் கொள்ளை:மதிப்பு ரூ. 12 லட்சம்
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகள், பொருட்கள் கொள்ளை போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி எஸ்.ஆர்.எஸ். கார்டன் பகுதி 4வது தெருவை சேர்ந்தவர்ச் கோபாலன். சாகுபுரத்தில் உள்ள தொழிற்சாலையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சீதா. ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களது மகன் சீனிவாசன். அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் வீட்டின் மாடியில் படுத்துத் தூங்கினர். நேற்று அதிகாலை பால் வாங்குவதற்காக இருவரும் மாடியில் இருந்து கீழே வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் கதவு, பூஜையறை கதவும் உடைக்கப்பட்டிருந்தது.
பூஜையறைக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சிறிய பெட்டி திருடப்பட்டிருந்தது. அதில் 50 பவுன் தங்க நகைகள், ஒரு வைர கம்மல், மூக்குத்தி, 40 ரூ. 40,000 ரொக்கம், 600 அமெரிக்க டாலர் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு கோபாலன், சீதா மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. கோபாலன் வீட்டை சுறறி ஏராளமான வீடுகள் உள்ளன. அப்படியிருந்தும் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications