நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா?: அத்வானி

ஊழல் மற்றும் கருப்புப் பணத்திற்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நேற்று மதுரை வந்தார். மதுரை மேலமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
இரவு மதுரையில் தங்கிய அத்வானி இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், மத்தியில் மீண்டும் கூட்டணி அரசுதான் அமையும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.
ராஜிவ் கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை விவகாரத்தில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதையே பாஜக கவனத்தில் எடுத்துக் கொள்ளும். அதேபோல நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதுதான் பாஜகவின் நிலையாக இருக்கும்.
பொதுவாக அணு மின் நிலையங்கள் அமைக்கப்படும்போது மிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பையும் மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். அணு மின் நிலையம் அமைக்கும்போது பொதுமக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
எனது ரத யாத்திரை, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்கவும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் தான். எனது சுய நலனுக்காகவே அல்லது வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டோ இந்த யாத்திரையை நான் நடத்தவில்லை என்றார்.
ஊழலுக்கு எதிராக போராடும் நீங்கள் உங்கள் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, கர்நாடகாவில் லோக் ஆயுக்தா அமைக்க முதலில் போராடியது பாஜக தான். பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஊழலுக்கு துணை போனால் கட்சி அவர்களிடம் மென்மையான போக்கினை கடைப்பிடிக்காது என்றார்.
முன்னதாக நேற்றிரவு பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் ரூ. 1 லட்சம் கோடியைத் தான் எடுத்துச் சென்றனர். ஆனால் சுதந்திரமடைந்த பிறகு 50 ஆண்டுகளி்ல் இவர்கள் ஆட்சியில் நடந்த கொள்ளை மதிப்பு மட்டும் ரூ. 25 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு, கருப்புப் பணத்தை மீட்பது குறித்து நான் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மன்மோகன்சிங் போல் ஊழலில் மூழ்கிய பிரதமரை நான் பார்த்தேயில்லை. எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவர் முடங்கியுள்ளார். நான் யாத்திரை செல்லும் இடமெல்லாம் மக்கள் அமோக ஆதரவு அளிக்கிறார்கள். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அந்த பணத்தை கொண்டு வந்து 6 லட்சம் கிராமங்களுக்கு பயன்படுத்தினால் நல்ல கல்வி, மருத்துவ வசதி, குடிநீர், விவசாயம் இல்லாத கிராமமே இருக்காது. ஆனால் இந்த அரசு முடங்கிக் கிடக்கின்றது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 50,000 தமிழ் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தருவோம் என்று வெளியுறவுத் துறை செயலாளர் மூலம் அந்நாட்டுக்கு உத்தரவாதம் கொடுத்தார்கள். ஆனால் சொன்னபடி எதையும் செய்யவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. ஃபுகுஷிமா அணுஉலையில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறது பெரும்பாலான நாடுகள் கடலோரத்தில் உள்ள அணுஉலைகளை மறுசீரமைத்து வருகின்றன.
கூடங்குளம் அணுமின் நிலையமும் கடோலரத்தில் தான் உள்ளது. கடலோர மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். வர்த்தக அம்சங்களுக்காகவோ, கான்டிராக்ட் விடப்பட்டுவிட்டதே என்பதற்காகவோ மக்கள் பாதுகாப்பை அலட்சியப்படுத்தக் கூடாது.
நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டோ அல்லது பாஜகவின் பலத்தை அதிகரிக்கவோ இந்த யாத்திரையை மேற்கொள்ளவில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தான் யாத்திரை மேற்கொண்டுள்ளேன். 21ம் நூற்றாண்டில் இந்தியா பொருளாதாரத்தில் வல்லரசாக ஆகும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால் காங்கிரஸ் அரசின் ஊழல்களால் அது நடக்காமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அத்வானியின் மகள் பிரதீபா அத்வானி, இல. கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அத்வானிக்கு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பிறகு அவர் அழகர்கோவில் ரோட்டில் உள்ள சங்கம் ஹோட்டலில் தங்கினார். இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தின் வடபகுதி எல்லையான தேவிபட்டிணம் விலக்கு அருகே பாஜக தலைவர் பாண்டித்துரை தலைமையில் அத்வானிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து சிவகிரியில் பிரசாரத்தில் ஈடுபடும் அவர் மதியம் 1.30 மணிக்கு வாசுதேவநல்லூர் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் ஓய்வு எடுக்கிறார். பின்னர் வாசுதேவநல்லூர் வழியாக புளியங்குடி பஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்று பேசுகிறார்.
நெல்லையில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து கொச்சிக்கு செல்லும் அவர் நாளை மாலை மரைன் டிரைவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் பெங்களூர் செல்கிறார்.












Click it and Unblock the Notifications